My world according to me

Friday, January 18, 2013

போலீஸ்கார‌ன் ‍- சிறு க‌தை


"இனிமேலாவ‌து இந்த‌ த‌ப்பெல்லாம் ப‌ண்ண‌க் கூடாது. காலேஜ் ப‌டிக்க‌ற‌ பைய‌னுக்கு எதுக்கு இந்த‌ வேலை. ப‌டிச்சு முன்னேற‌ வ‌ழிய‌ பாரு. இன்னொரு முறை இதே த‌ப்பைப் ப‌ண்ணினேனு தெரிஞ்சுது, தொலைச்சுடுவேன் தொலைச்சு" என்றான் இன்ஸ்பெக்ட‌ர் பிர‌பாக‌ர‌ன். அவ‌ன் அத‌ட்டிய‌து ஒரு மாற்ற‌த்தை அந்த‌ பைய‌னுக்குள் ஏற்ப‌டுத்திய‌தை அங்கிருந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் உண‌ர்ந்த‌ன‌ர். அந்த‌ பைய‌னின் பாட்டி பிர‌பாக‌ர‌னின் காலில் விழ‌ப் போனாள்.

"என் காலில் விழுந்து என்னை தெய்வ‌மாக்காதீங்க‌. ஒழுங்கா பையனை வ‌ள‌ர்க்க‌ பாருங்க‌ள். செந்தில் அண்ணே நான் கிள‌ம்புறேன்." கான்ஸ்ட‌பிள் செந்தில் த‌லையாட்டினார். வ‌ழி நெடுக‌ வெயிலின் உக்கிர‌ம் அதிக‌மாவ‌து போல் தோன்றிய‌து அவ‌னுக்கு. வீட்டுக்கு ஒரு ஏசி போட‌ணும் என்று எண்ணிய‌வாறே வீடு வ‌ந்து சேர்ந்தான்.

"ய‌ப்பா.. என்ன‌ வெயிலு.. என்ன‌ வெயிலு.. கொளுத்துது வெளியில‌.. எஸ்.பி. வேற BP ஏத்துறாரு.. ஹூம்" என்றுச் ச‌லித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். தொப்பியை க‌ழ‌ட்டி ச‌ட்டை ப‌ட்ட‌னை திற‌ந்துவிட்டு, ஃபேன் சுவிட்சைத் த‌ட்டிவிட்டு சோஃபாவில் தொப்பென்று விழுந்தான். அப்போது ம‌ணி இர‌ண்ட‌ரை. ஞாயிற்றுக்கிழ‌மை அதுவுமாக‌ வேலைக்கு போய்விட்டு அப்போதுதான் வ‌ந்தான். அது ச‌ரி போலிஸ்கார‌னுக்கு ஏது நாள் கிழ‌மை. அவ‌ன் வ‌ருகையை எதிர்பார்த்த‌து போல‌ அவ‌னின் செல்ல‌ ம‌க‌ன் முகில் ஓடி வ‌ந்து அவ‌ன் க‌ழுத்தை இறுக்கிக் க‌ட்டிக் கொண்டான்.

"சார‌தா.. சார‌தா.. அங்கே என்ன‌டி ப‌ண்றே அடுப்ப‌டியில‌? இங்க‌ வ‌ந்து இவ‌னைக் கூட்டிக்கிட்டு போ. நேர‌ம் கால‌ம் தெரியாம‌ மேல‌ வ‌ந்து விழுந்துக்கிட்டு" என்றுக் கோப‌மாக‌க் க‌த்தினான் பிர‌பாக‌ர‌ன். அவ‌ன் கோப‌த்தைப் புரிந்துக் கொண்டு வில‌கிக் கொண்டான் முகில். சார‌தா அடுப்ப‌டியிலிருந்து விருட்டென‌ வெளியில் வ‌ந்தாள்.

"உங்க‌ கோவ‌மெல்லாம் புள்ள‌க்கிட்ட‌ காட்டாதீங்க‌. ஒரு நாளாவ‌து வீட்டுக்கு சீக்கிர‌ம் வ‌ந்து குடும்ப‌த்தோடு இருக்க‌ணும்னு தோணுதா உங்க‌ளுக்கு. நீங்க‌ எப்ப‌ வ‌ருவீங்க‌ன்னு ரொம்ப‌ நேர‌மா காத்துக்கிட்டு இருக்கான் உங்க‌ புள்ளை. புள்ளை மேல‌ அக்க‌றை இருந்தாதானே? எப்ப‌ பாரு வேலை வேலை.. அதையே க‌ட்டிக்கிட்டு அழுங்க‌" என்று க‌ண‌வ‌னை ஒரு பிடி பிடித்தாள் சார‌தா.

"ஆமாம்டி வெளியில‌ போயிட்டு க‌ளைப்பா வ‌ந்து உட்கார்ந்த‌ உட‌னே க‌ழுத்தைப் பிடிச்சு இழுத்தா கோவ‌ம் வ‌ராதா? கொஞ்ச‌ம் நேர‌ம் க‌ழிச்சு வ‌ந்து கொஞ்சினால் ஆகாதா" என்று த‌ன் ஆத‌ங்க‌த்தைச் சொன்னான் பிர‌பாக‌ர‌ன். அவ‌னின் கோவ‌ம் ச‌ற்று த‌ணிந்து இருந்த‌தை உண‌ர்ந்துக் கொண்டாள் சார‌தா. தான் அத‌ட்டிய‌து வேலைச் செய்துவிட்ட‌தால் அவ‌ள் கோவ‌மும் குறைந்துவிட்ட‌து.

"என்ன‌ சாப்பாடு இன்னைக்கு?"

"மீன் குழ‌ம்பு, மீன் வ‌றுவ‌ல், ர‌ச‌ம், த‌யிர். நீங்க‌ சொன்ன‌வுட‌னே மீனை பொறிக்க‌றேன்"

"என்ன‌ மீன்"

"உங்க‌ளுக்கு புடிச்ச‌ கெளுத்தி மீனு. மார்க்கெட்டுக்கு போய் நானும் த‌ம்பியும் வாங்கினோம். என்னைப் பார்த்த‌தும் அந்த‌ க‌டைக்கார‌ர் ந‌ல்ல‌ மீனா போட்டுக் கொடுத்தார். காசு வேண்டாம் என்று சொன்னாரு. நான் தான் சாருக்கு அதெல்லாம் பிடிக்காதுனு சொல்லி ப‌ண‌த்தைக் கொடுத்தேன்" என்று பெருமையோடு சொன்னாள்.

ப‌சி வேறு வ‌யிற்றைக் கிள்ளிய‌து பிர‌பாகர‌னுக்கு, "நான் போய் குளிச்சிட்டு வ‌ர்றேன். நீ பொறிச்சு வை" என்றான்.

"அப்பா, சாப்பிட்டு முடிச்சிட்டு என் கூட‌ விளையாடுவீங்க‌ளா?"

"ச‌ரிடா"

குளித்துவிட்டு வேக‌ வேக‌மாய் வ‌ந்து சாப்பிட்ட உட்கார்ந்தான் பிர‌பாக‌ர‌ன்.

"நீங்க‌ எல்லாம் சாப்பிட்டாச்சா?" என்று கேட்டான்.

"ம்ம் ஆச்சு. என்ன‌ டென்ஷ‌ன் ஆபிஸ்ல‌?" என்று ஆர்வ‌மாய் கேட்டாள் சார‌தா.

"ஒரு கொலைக் கேசு. செத்த‌து ஹை புரோஃபைல் பிசின‌ஸ்மேன். துப்பு துல‌ங்க‌மாட்டேங்குது. என‌க்கு ந‌ல்லா தெரியுது இது கொலைன்னு. ஆனா எஸ்.பி அவ‌ச‌ர‌ப்ப‌டுத்த‌றார். போஸ்ட்மார்ட்ட‌ம் ரிப்போர்ட்டும் கொஞ்ச‌ம் இடிக்குது. டாக்ட‌ரும், எஸ்.பியும் இதுல‌ ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்டு இருப்பாங்க‌ன்னு தோணுது. ஆனா வ‌லுவா ஒரு ஆதார‌ம் கிடைச்சா போதும்.  செத்த‌ பிஸின‌ஸ்மேனின் பார்ட்ன‌ர் மேல‌ என‌க்கு ட‌வுட் இருக்கு. ஆனா அந்த‌ ஆளை விசாரிக்க‌ விட‌ மாட்டேங்கிறாரு எஸ்.பி . த‌ற்கொலை தானே. கேச‌ எப்ப‌ முடிப்பேன்னு கேட்டு தொல்லை ப‌ண்றாரு. போஸ்ட்மார்ட்ட‌ம் ப‌ண்ணின‌ டாக்ட‌ரும் த‌ற்கொலைன்னு எழுதிக் கொடுத்திட்டாரு. ஒரு க்ளு கிடைச்சா போதும். டாக்ட‌ரையும், எஸ்.பியையும் ஒரு பிடி பிடிச்சுடுவேன்."  மீனைச் சுவைத்த‌ப‌டியே இன்னும் ஒரு துண்டை எடுத்துக் கொண்டான்.

ஒரு வ‌ழியாக‌ சாப்பிட்டு முடித்து அருகில் உட்கார்ந்து இருந்த‌ ம‌க‌னின் த‌லையை செல்ல‌மாய் கோதினான்.

"அப்பாடி இப்ப‌த்தான் புள்ளைக் க‌ண்ணுக்கு தெரிய‌றானா" என்றுச் செல்ல‌மாய் வம்புக்கு இழுத்தாள்.

"ப‌சிடீ.. நான் என்ன‌ செய்ய‌ட்டும். டேய் நீ இப்ப‌ சொல்லுடா என்ன‌ வெளையாட‌லாம்?" சொல்லிவிட்டானேத் த‌விர‌ அவ‌ன் ம‌ன‌ம் இன்னும் அந்த‌ கொலை வ‌ழ‌க்கையேப் ப‌த்தியே எண்ணிக் கொண்டிருந்தது.

அப்பாவும் பைய‌னும் வெகு நேர‌ம் விளையாடிக் கொண்டிருந்த‌ன‌ர். இப்போது வ‌ழ‌க்கை சுத்த‌மாக‌ ம‌ற‌ந்துவிட்டான். நேர‌ம் போன‌தே பிர‌பாக‌ர‌னுக்குத் தெரிய‌வில்லை. மாலை ஐந்து ம‌ணிக்கு சார‌தா ப‌க்கோடா பொரித்து எடுத்துக்கொண்டு வ‌ந்தாள். ஒவ்வொன்றாய் எடுத்துச் சாப்பிட்ட‌வ‌னுக்கு ஒரு சில‌ ப‌க்கோடாக்க‌ள் க‌ருகி இருப்ப‌தைப் பார்த்தான். முகில் அதைக் கையில் எடுத்து, "அம்மா திருப்பிப் போட‌ ம‌ற‌ந்துட்டா போல‌. பாருங்க‌ அப்பா, இந்த‌ ப‌க்க‌ம் ந‌ல்லாத்தான் இருக்கு. ஒரு ப‌க்க‌ம்தான் க‌ருகி இருக்கு. ஆனாலும் டேஸ்டி!"

ஏதோ பொறித் த‌ட்டிய‌து பிர‌பாக‌ர‌னுக்கு. அந்த‌ ப‌க்கோடா க‌ருகிய‌ வித‌ம் அவ‌னுக்கு ஏதோ ஒன்றை‌ச் சொல்லிய‌து. ம‌ன‌துக்குள் அவ‌னுக்கு அந்த‌ கொலை வ‌ழ‌க்கு முத‌லிலிருந்து ஓடிய‌து. அவ‌ன் தேடிய‌ வ‌லுவான‌ ஆதார‌ம் சிக்கிய‌தை உண‌ர்ந்து கொண்டான்.

அலைபேசியைக் கையில் எடுத்து அந்த‌ பிஸின‌ஸ் பார்ட்ன‌ருக்குப் ஃபோன் போட்டான்.

"என‌க்கு ஒரு முக்கிய‌மான‌ ஆதார‌ம் கிடைச்சிருக்கு. உங்க‌கிட்ட‌ விசார‌ணை ப‌ண்ண‌ வேண்டியிருக்கு. கொஞ்ச‌ம் ஸ்டேஷ‌ன் வ‌ரைக்கும் வ‌ர‌ முடியுமா?"

அடுத்த‌ முனையில் ப‌த‌ட்ட‌த்துட‌ன், "என்ன‌ சார் கிடைச்சிருக்கு? என்னைச் ச‌ந்தேக‌ப்ப‌ட‌றீங்க‌ளா?"

"இல்லை. நீங்க‌ வாங்க‌ நேரில் பேசிக்குவோம்" என்றுச் சொல்லி ஃபோனை ப‌ட‌க்கென்று துண்டித்தான்.

"சார‌தா, என‌க்கு ஒரு ந‌ல்ல‌ க்ளு கொடுத்திருக்கே. நான் போய் விசார‌ணை ப‌ண்ண‌ வேண்டியிருக்கு. நீயும் த‌ம்பியும் சாப்பிட்டு ப‌டுத்துத் தூங்குங்க‌. நான் சீக்கிர‌ம் வ‌ந்திடுவேன்."

"என்ன‌ங்க‌ நீங்க‌? இப்ப‌த்தான் வ‌ந்தீங்க‌.அதுக்குள்ள‌ போறேன்னு சொல்றீங்க‌.. என‌க்கு வ‌ர‌ வ‌ர‌ உங்க‌ போக்கே புடிக்க‌லீங்க‌.. ஹூம்" என்று பொறுமினாள். அவ‌ளைச் ச‌மாத‌ன‌ம் ப‌ண்ணிவிட்டு வீட்டை விட்டு புல்ல‌ட்டில் ஏறி ஆபிஸ் வ‌ர‌ ஏழு ம‌ணி ஆன‌து.

அவ‌ன் நினைத்த‌து போல‌வே அங்கே எஸ்.பியும் டாக்ட‌ரும் இருந்த‌ன‌ர். பொறி வைத்த‌து அந்த‌ மூவ‌ருக்கும் தானே என்று ம‌ன‌சுக்குள் எண்ணி, "என்ன‌ சார் நீங்க‌ இந்த‌ நேர‌த்தில் இங்க‌?" என்றான் பிர‌பாக‌ர‌ன்.

"ஏன்யா இப்ப‌டி டார்ச‌ர் ப‌ண்றே? நான் தான் கேஸை முடி.. ஆதார‌ம் எல்லாம் ச‌ரியா இருக்கு. ச‌ரி ச‌ரின்னு த‌லையை ஆட்டிட்டு இப்ப‌ எதுக்காக‌ இவ‌ரை வ‌ர‌ச் சொல்லி இருக்கே"

"உள்ளே போய் பேசுவோம் சார். யாருமே இல்லையா? நீங்க‌ ம‌ட்டும்தான் இருக்கீங்க‌ளா செந்தில் அண்ணே?" என்று கான்ஸ்ட‌பிள் செந்திலைக் கேட்டான். அவ‌ரும், "ரைட்ட‌ர் இப்ப‌த்தான் வெளியே போனாரு. ஏட்ட‌ய்யா த‌லைய‌ வ‌லிக்குதுன்னு கிள‌ம்பிட்டார். நீங்க‌ வ‌ருவீங்க‌ன்னு நான் எதிர்பார்க்க‌லை சார்" என்றார் ஒரு வித‌ ப‌ய‌த்துட‌ன்.

"ஒண்ணுமில்லை அண்ணே. நீங்க‌ போய் நாலு டீ வாங்கிட்டு வாங்க‌." அப்ப‌டி சொன்னால் கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ ப‌க்க‌மே வ‌ர‌க்கூடாது என்று அர்த்த‌ம். கான்ஸ்ட‌பிள் செந்தில் விருட்டென‌ அங்கிருந்து புற‌ப்ப‌ட்டார்.

"என்ன‌ய்யா புதுசா ஆதார‌ம் இருக்குன்னு சொன்னியாமே?"

"ஆமாம் சார். இவ‌ர் கொடுத்த‌ வாக்குமூல‌ம் ப‌டி இவ‌ரும் இவ‌ருடைய‌ பார்ட்ன‌ரும் ம‌ட்டும்தான் ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ இட‌த்தில் இருந்திருக்காங்க‌. ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ போது இவ‌ர் கீழே இருந்த‌ சினிமா ஹாலில் உட்கார்ந்து சினிமா பார்த்துக்கிட்டு இருந்தோம் என்று சொல்லியிருக்கார்." என்று கொஞ்ச‌ம் இடைவெளி விட்டான்.

"ஆமாம் இன்ஸ்பெக்ட‌ர். என் ஃப்ரெண்டு மேல‌ போய் குளிச்சுட்டு வ‌ர்றேன்னு சொன்னான். ச‌ரி குளிச்சிட்டு வ‌ர‌ட்டும்னு நான் ப‌ட‌ம் தொட‌ர்ந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு பார்த்தா வீட்டுக்குள்ளே ஏதோ எரிய‌ற‌ மாதிரி தீஞ்ச‌ வாச‌னை." என்றார் ப‌த‌ட்ட‌த்துட‌ன்.

தொட‌ர்ந்து ப‌த‌ட்ட‌த்துட‌ன், "மேலே போய் அவ‌னை காப்பாத்த‌லாம்னு போனேன். அந்த‌ ரூம் க‌த‌வை எட்டி உதைச்சேன். அன‌லாய் கொதிச்சுக்கிட்டு இருந்திச்சு அந்த‌ இட‌மே. என்னால‌ அவ‌னைக் காப்பாத்த‌ முடிய‌லை" என்று ஓவென்று அழ‌த் தொட‌ங்கினார் பார்ட்ன‌ர்.

"அவ‌னுக்கு ந‌ல்ல‌ இல‌கின‌ ம‌ன‌சு சார். ரெண்டு நாள் முன்னாடி தான் பிஸின‌ஸ்ல‌ ஒரு சின்ன‌ சிக்க‌ல். தாங்க‌ முடியாம‌ல் போய் சேர்ந்துட்டான். அவ‌ன் குடும்ப‌த்தை எப்ப‌டி தேத்த‌ப் போறேன்னே தெரியலை" என்றார் விசும்ப‌லுட‌ன்.

எஸ்.பி, "நீங்க‌ அழாதீங்க‌ அழ‌க‌ப்ப‌ன். எல்லாத்துக்கும் கால‌த்துக்கிட்ட‌ ப‌தில் இருக்கு." அங்கு ந‌ட‌ப்ப‌தை ஒரு வித‌ க‌ல‌வ‌ர‌த்துட‌ன் டாக்ட‌ர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

"பிர‌பாக‌ர‌ன், நேரா விஷ‌ய‌த்துக்கு வா. என்ன‌ ஆதார‌ம் க‌ண்டுபிடிச்சே?" என்றார் எஸ்.பி. அந்த‌ குர‌லில் அதிகார‌ம் இருந்தாலும் ச‌ற்று ப‌ய‌த்தினையும் பிர‌பாக‌ர‌னால் உண‌ர‌ முடிந்த‌து.

"எல்லாத்தையும் ச‌ரியாத்தான் செஞ்சு இருக்கீங்க‌. ரூம் பூரா  எரிந்த‌து போல‌ ஒரு செட்ட‌ப். க‌த‌வை உடைச்சு வெச்ச‌து. ஆனால் ஒரு விஷ‌ய‌த்தை ம‌ற‌ந்துட்டீங்க‌. த‌ற்கொலை ப‌ண்ணிக்கிட்ட‌வ‌ருக்கு ஏன் முதுகு ப‌க்க‌ம் ஒரு தீக்காய‌மும் இல்லை?  ப‌டுத்துக்கிட்டா ம‌ண்ணெணெய‌ மேல‌ ஊத்திப்பான்? அதுவும் இல்லாம‌ க‌த‌வை உடைச்சீங்க‌ ச‌ரி. ஆனா க‌த‌வு உள்ப‌க்க‌மா இல்லையா விழுந்து இருக்கும். இந்த‌ ஃபோட்டோஸ் எல்லாம் பாருங்க‌ சார். செத்துப் போன‌வ‌னின் முதுகு ப‌க்க‌ம் அப்ப‌டியே இருக்கு." என்று மூவ‌ரையும் விழிங்கிவிடுவ‌துப் போல‌ பார்த்தான். விய‌ர்த்து கொட்டிய‌து மூவ‌ருக்கும். ச‌ரிதான் நாம் வ‌கையா மாட்டிக் கொண்டோம். என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் திருதிருவென‌ முழித்த‌ன‌ர். பேய் அறைந்த‌து போல‌ மூவ‌ரும் ஒன்றுமே சொல்லாம‌ல் உட்கார்ந்து இருந்த‌ன‌ர்.

அங்கு நில‌விய‌ ம‌யான‌ அமைதியை பிர‌பாக‌ர‌னே க‌லைத்தான், "என‌க்கு வெயிட்டா ஒரு தொகையை வெட்டுங்க‌.. இந்த‌ கேசை ஒண்ணும் இல்லாம‌ நான் பாத்துக்க‌றேன்" என்றான் தெனாவெட்டாக‌!

0 Comments:

Post a Comment

<< Home