My world according to me

Thursday, January 31, 2013

ஓய்வு - Short Story

நேற்று வ‌ரை அலுவ‌ல‌க‌ம் சென்று வ‌ந்த‌ என‌க்கு இன்று முத‌ல் ஓய்வு. இருப‌த்திமூன்று வ‌ய‌தில் வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கி, நேற்றோடு முப்ப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ள் ஆகிவிட்ட‌ன‌. ஒரு கிளார்க்காக‌ வேலைக்குச் சேர்ந்து ப‌டிப்ப‌டியாக‌ முன்னேறி டிவிஷ‌ன‌ல் மேலாள‌ராக‌ ப‌ணிபுரிந்து ஒய்வு பெற்றுவிட்டேன். என‌க்கு பிற‌கு வ‌ர‌யிருக்கும் மேலாள‌ர் வ‌ராம‌ல் இருந்து என்னை ப‌ணிக்கு மீண்டும் கூப்பிட‌ மாட்டார்க‌ளா என்று ஒரு ந‌ப்பாசை. இந்த‌ இர‌வே வித்தியாச‌மாக‌ இருந்த‌து. நானும் புர‌ண்டு புர‌ண்டு ப‌டுத்தும் பார்த்தேன் தூக்க‌ம் வ‌ரவில்லை. இதுநாள் வ‌ரை நான் ச‌ற்றும் க‌வ‌னிக்காத‌ சுவ‌ர் க‌டிகார‌ம் என்னைத் துன்புறுத்திய‌து. அத‌ன் முள் ந‌க‌ரும் ஓசை என்னைப் பாடாய் ப‌டுத்திய‌து. இர‌ண்டு தெரு த‌ள்ளி இருக்கும் நாய் குலைக்கும் ச‌த்த‌ம் என‌க்கு தெளிவாய் கேட்ட‌து. ரோட்டில் இரண்டாவ‌து ஆட்ட‌ம் பார்த்து திரும்புவ‌ர்க‌ள் பேசுவ‌து தெளிவாய் கேட்ட‌து என‌க்கு. மெல்லிய‌ நைட் லாம்ப் வெளிச்ச‌த்தில் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் நான் க‌ண்ட‌ பெட்ரூமா இது? ம‌ன‌தை அச்ச‌ம் உட்கொண்ட‌து. ம‌ன‌ம் தேவையில்லாம‌ல் ப‌த‌றிய‌து. இது நாள் வ‌ரை நான் இதை எதையுமே நான் கேட்ட‌தில்லை, உண‌ர்ந்த‌தில்லை. இதுவே முத‌ல் முறை. என‌க்கோ ப‌ய‌ம். இனி இப்ப‌டித்தான் இர‌வுக‌ள் தொட‌ருமோ? இர‌வு முழுவ‌தும் தூங்க‌ முடிய‌வில்லை. எப்ப‌டி வ‌ரும் தூக்க‌ம்?

எப்போது தூங்கினேன் என்று தெரிய‌வில்லை. மூன்று ம‌ணி இருக்கும். ஏனெனில் இர‌ண்டு ஐம்ப‌த்தியேழுக்கு ஒரு குடிகார‌ன் உள‌றிக் கொண்டே சென்ற‌து நினைவிற்கு வ‌ந்தது. காலை எழுந்த‌வுட‌ன் இதைவிட‌ அதிக‌மாய் ப‌ட‌ப்போகிறேன் என்று அப்போது உண‌ர‌வில்லை. விடிய‌ற்காலை ஐந்து ம‌ணிக்கு பால் பாக்கெட் போடும் ந‌ப‌ரின் ம‌ணியோசை எழுப்பிய‌து. இது நாள் வ‌ரை இந்த‌ ஓசையைக் கேட்ட‌து இல்லை. இதுவே முத‌ல் முறை. என் மனைவி என்னிட‌ம், "நீங்க‌ முளிச்சுக்கிட்டு தானே இருக்கீங்க‌. நீங்க‌ளே இனிமேல் வாங்கி வைங்க‌. இனி இது உங்க‌ வேலை" என்றாள். என‌க்கோ ப‌டு கோப‌ம் வ‌ந்த‌து. ஆனால் அவ‌ள் சொல்வ‌திலும் நியாய‌ம் இருக்கிற‌து. அவ‌ளும் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளாய் இந்த‌ வேலையைச் செய்து வ‌ந்த‌வ‌ள் தானே! அவ‌ளுக்கு ஓய்வு கொடுப்போமே என்று ச‌மாதான‌ம் ப‌ண்ணிக் கொண்டு, "பால் கார்டு எங்கே" என்றேன். அவ‌ளிட‌மிருந்து குற‌ட்டையே ப‌திலாய் வ‌ந்த‌து. ஒரு வ‌ழியாக‌ அதைத் தேடி க‌ண்டுபிடித்து போய் வாங்குவ‌த‌ற்குள் மூன்று முறை ம‌ணியோசையை அழுத்திவிட்டான். அவ‌னுக்கு என்ன‌ அவ‌ச‌ர‌மோ?! எத்தனை லிட்ட‌ர் வாங்க‌வேண்டும் என்றுக் கூட‌ தெரிய‌வில்லை. ச‌ரி அவ‌னிட‌மே கேட்டுவிட‌லாம் என்று க‌த‌வைத் திற‌ந்து, கேட்டேன். சிரித்துவிட்டான், "என்னா சார் எப்ப‌வும் அம்மாத்தான் வாங்குவாங்க‌.. இன்னிக்கு நீ வாங்குறே.. ரிட்ட‌ய‌ர் ஆகிட்டியா?" என்றான். என‌க்கோ ஆச்ச‌ர்ய‌ம். எப்ப‌டி தெரியும் அவ‌னுக்கு? என‌க்கு புல‌ப்ப‌ட‌வில்லை. என் கையில் இர‌ண்டு அரை லிட்ட‌ர் பாக்கெட் பாலை கொடுத்துவிட்டு, "கார்டுல‌ இருக்கும் பார் சார். நீங்க‌ வ‌ழ‌க்க‌மா ஒரு நாளைக்கு ஒரு லிட்ட‌ர் வாங்குறீங்க‌. வ‌ர்ட்டா" என்றான் அண்ணாம‌லை போல்!

ஐந்து ம‌ணிக்கு வெகு சில‌ நாட்க‌ளே எழுந்திருக்கிறேன். ஆனால் இன்று என்ன‌வோ புதிதாய் ப‌ள்ளிக்குச் செல்லும் மாண‌வ‌னின் அச்ச‌ம் ம‌ன‌தில் உண‌ர‌ முடிந்த‌து. க‌த‌வை மூடிவிட்டு, ஃப்ரிட்ஜுக்குள் பாலை வைத்தேன். அடுத்து என்ன‌ செய்வ‌து என்று விள‌ங்க‌வில்லை. ஒரு வ‌ழியாக‌ காலை க‌ட‌ன்க‌ளை முடித்து, குளித்து முடித்துவிட்டு வ‌ந்த‌ போது ம‌ணி ஐந்த‌ரை ஆகி இருந்த‌து. ம‌ற்ற‌ நாட்க‌ளில் இதுவே ஒரு ம‌ணி நேர‌ம் எடுக்குமே, இன்று ம‌ட்டும் என்ன‌ இப்ப‌டி மெதுவாக‌ நேர‌ம் செல்கிற‌து? அதுவுமில்லாம‌ல் இன்று நாம் அதிக‌ நேர‌ம் அல்ல‌வா குளித்தோம் என்று ம‌ன‌திற்குள் எண்ண‌ம் ஓடிய‌து. காம்ப‌வுண்ட் சுவ‌ரில் அன்றைய‌ தின‌ச‌ரி நாளித‌ழைக் க‌ண்டேன். அதை எடுத்து வ‌ந்து ப‌டிக்க‌ உட்கார்ந்தேன். ப‌சி வ‌யிற்றை கிள்ளிய‌து. சித‌ம்ப‌ர‌த்தில் வேலை செய்யும்போது த‌னியாக‌ ஆறு மாத‌ கால‌ம் வேலைப் பார்த்தேன். அப்போது ச‌மைக்க‌க் க‌த்துக் கொண்ட‌து இப்போது உத‌வுகிற‌து. காஃப்பி போட்டு குடிக்க‌லாம் என்று எழுந்து அடுப்ப‌ங்க‌ரைக்கு வ‌ந்தால் மேடை முழுவ‌தும் எறும்பு. அதைச் சுத்த‌ம் செய்து, காஃப்பி போட்டு முடிக்க‌ ஆறேகால்தான் ஆன‌து. இன்ன‌மும் அவ‌ள் குற‌ட்டைச் ச‌த்த‌ம் ஹால் வ‌ரை கேட்ட‌து. பாவ‌ம் அவ‌ளுக்கும் ஓய்வு தேவை. பேப்ப‌ர் ப‌டித்து முடிக்கும் போது ம‌ணி ஏழு. ஒரு வ‌ழியாக‌ சுப‌த்ரா எழுந்து வ‌ந்தாள்.

"ஏன் தூக்க‌மே வ‌ர‌லையா? புர‌ண்டு புர‌ண்டு தூங்க‌ பார்த்தீங்க‌. இதுதானே முத‌ல் நாள் போக‌ப் போக‌ ச‌ரியாயிடும். நான் நிம்ம‌தியா தூங்கினேன். டிகாக்ஷ‌ன் போட்டீங்க‌ளா. ம‌ன‌ம் தூக்குது!"

"ம்ம். போட்டு வ‌ச்சிருக்கேன். போய் குளிச்சிட்டு வா, நான் காஃப்பி க‌ல‌ந்து வைக்கிறேன்."

"என்ன‌ டிப‌ன் செய்ய‌ட்டும்"

"நீ முத‌ல்ல‌ குளிச்சிட்டு வா. அப்புற‌ம் யோசிக்க‌லாம்"

"ச‌ரி"

அவ‌ள் ந‌க‌ர‌ நான் மீண்டும் தின‌ச‌ரியில் மூழ்கினேன்.

"இந்தாங்க‌ சாப்பிடுங்க‌" என்றாள் சுப‌த்ரா. என‌க்கோ ஆச்ச‌ர்யம். எப்ப‌டி இவ்வ‌ள‌வு சுறுசுறுப்பா செய்தாள். விய‌ந்துக் கொண்டே த‌ட்டிலிருந்த‌ வெண்பொங்க‌லைச் சுவைத்தேன். பாவ‌ம் அவ‌ளுக்கு ஆங்காங்கே சுறுக்க‌ங்க‌ள் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. ந‌ரை முடிக‌ளும் காதோர‌ம் தென்ப‌ட்ட‌ன.

"வெண்பொங்க‌ல் பிர‌மாதம்டி. இன்னிக்கு என்ன‌ ப்ளான்?"

"ஒன்னும் பெரிசா இல்லை. ப‌த்து ம‌ணிக்கு ரேஷ‌ன் க‌டை, ப‌தினோரு ம‌ணிக்கு க‌ர‌ண்ட் பில், ப‌ன்னிரெண்டு ம‌ணிக்கு ப்ள‌ம்ப‌ர் வ‌ருகிறார். கூட‌மாட‌ இருக்க‌ணும். ஒரு ம‌ணிக்கு சாப்பாடு. ஒன்ற‌ரை டு மூணு தூக்க‌ம். மூணேக் காலுக்கு லைப்ர‌ரிக்கு போய் புக்ஸ் ரிட்ட‌ர்ன். புது புக்ஸ் கொஞ்ச‌ம் எடுத்து வ‌ர‌ணும். ஐந்து ம‌ணிக்கு பார்க்கில் ஈவ்னிங் வாக். ஆறு ம‌ணிக்கு வீட்டுக்கு வ‌ந்துட‌ணும். இன்னிக்கு ம‌ட்டும் தான் இந்த‌ வேலையெல்லாம். நாளைக்கு மாறும்" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

என‌க்கு த‌லைச் சுற்றிய‌து. அவ‌ள் சொன்ன‌ எல்லாவ‌ற்றையும் செய்தேன். கூட‌வே சில‌ காரிய‌ங்க‌ளும். அடுப்பு மேடைக்கு எறும்பு ம‌ருந்து. அவ‌ள் கால் பித்த‌ வெடிப்புக்கு ம‌ருந்து. அவ‌ளுக்கு என‌ர்ஜி த‌ர‌ ஊட்ட‌ச் ச‌த்துக்க‌ள். வீட்டில் சில‌ விள‌க்குக‌ள் எரிய‌ தேவையான‌ ப‌ல்புக‌ள். அவ‌ள் வீட்டுக்குள் அணிய‌ செருப்பு. கேஸ் வேறு குறைவாய் இருந்த‌து. அத‌ற்கும் சொல்லிவிட்டேன். அவ‌ள் ம‌ருந்துக‌ள் தீர்ந்துவிட்ட‌து, வாங்கி வ‌ந்தேன். கூட‌வே அவ‌ளுக்கு பிடித்த‌ ப‌ல‌கார‌ங்க‌ள். இனி நான் அவ‌ளுக்கு உத‌வியாய் இருக்க‌வேண்டும். அவ‌ளுக்கும் ஓய்வு தேவை. அன்று ப‌டுக்கையில் ப‌டுத்தேன், தூங்க‌ வெகு நேர‌ம் பிடிக்க‌வில்லை. அவ‌ள் அணைப்பில் க‌த‌க‌த‌ப்பாய் மெல்லிய‌ குற‌ட்டையுட‌ன் ஒன்ப‌த‌ரைக்கெல்லாம் தூங்கிவிட்டேன். இனி என‌க்கு ஓய்வில்லை!

1 Comments:

  • nice story, Geeta.... Retired life can also be made meaningful if time is spent for each other..

    By Blogger Unknown, at 7:49 PM  

Post a Comment

<< Home