My world according to me

Sunday, February 16, 2014

நாணயத்தின் பக்கங்கள்

கிர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர் அலைப்பேசி உறுமியது. சனிக்கிழமை அதுவுமா  இவ்வளவு காலையில யாராயிருக்கும் என்று அலுத்துக்கொண்டே அலைப்பேசியை எடுத்தாள் திவ்யா. மறுமுனையில் அவளது கல்லூரித் தோழி காவேரி.  இவ்வளவு காலையில் ஏன் காவேரி கூப்பிடுகிறாள்?

"என்னடி இவ்வளவு காலையில?" என்றுக் கேட்டாள் திவ்யா.

"இவருக்கு உங்க ஊருல வேலை. எனக்கு என்ன புள்ளயா குட்டியா? அதான்  நானும் அவர் கூட வர்றேன். உன்னையும் குட்டீஸ்களையும் பார்த்தது போல இருக்குமே. அதான் உனக்கு சொல்லிட்டு வரலாமேனுதான் ஃபோன் பண்ணினேன்."

"என்னிக்குடி வர்றே?"

"நான் முதல்ல சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நெனச்சேன். ஆனா சுரேஷ்தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு. நான் வியாழக்கிழமையே வந்துட்டேன்."

"வியாழக்கிழமையே வந்தவ நேரா இங்க வரவேண்டியதுதானே?"

"இல்லடி.. நான்தான் கார் ஓட்ட மாட்டேன்ல. சுரேஷ் இல்லாம என்னால தனியா வரமுடியாது. அதான் வீக் என்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்."

"சரி சரி காலையில டிபனுக்கே வந்திடு என்ன?"

"ஏய் இல்லடி.. நான் மதியானம் சாப்பாடுக்கு வந்திட்டு நாலு மணிக்கு கெளம்பிடுவேன். ஆறு மணிக்கு ஃப்ளைட் இருக்கு. போயாகணும்டி" என்றாள் காவேரி சோகமாக.

"எனக்கு முன்னாடியே சொல்லியிருந்தா நானே உன்ன வந்து பார்த்து இருப்பேனே? ஏண்டீ இப்படிப் பண்ணிட்டே? சே உன் கூட நல்லா ஊர் சுத்திட்டு இருந்திருக்கலாம். இப்படி ஒரு நல்ல சான்ஸ கெடுத்திட்டியேடீ"

"ஆமாம்டீ.. சொதப்பிட்டேன்..  சரி பத்து மணிக்கே வந்திடுறேன். உன் பொண்ணு ஷிவானியையாவது பாத்திருக்கேன். முகிலனை ஃபேஸ்புக்ல பார்த்ததோடு சரி.. ரொம்ப ஆசையா இருக்குதுடீ!" என்றாள் காவேரி.

"சரி.. நீ நேர்ல வா பேசிக்கலாம்" என்று அலைப்பேசியைத் துண்டித்தாள் திவ்யா.

"என்னாங்க.. எழுந்திரிங்க"

கண்ணன் கண்ணை இறுக்க முடிக் கொண்டான். தூங்குவது போல் பாசாங்குச் செய்தான். திவ்யாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"இப்ப எழுந்திரிக்க போறீங்களா இல்லையா? என் ஃப்ரெண்ட் காவேரி வர்றேன்னு சொல்லியிருக்கா. வீட்ட ஒதுங்க வைக்கணும் அவ வர்றதுக்குள்ள நெறைய வேலை செஞ்சாகணும்.. எழுந்திரிங்க" என்றாள் திவ்யா.

அலுத்துக் கொண்டே எழுந்தான் கண்ணன். காலை கடன்களை முடித்து இருவரும் வேக வேகமாக வீட்டைச் சுத்தம் செய்தார்கள். குழந்தைகள் ஷிவானியும், முகிலனும் சத்தம் கேட்டு எழுந்து வந்து உதவிச் செய்தனர். மணி பத்து அடிக்க வாசலில் சுரேஷும் காவேரியும். முகிலனும் ஷிவானியும் ஓடிச் சென்று கதவைத் திறக்க... காவேரிக்கு மெத்த மகிழ்ச்சி!

"முகில்ல்ல்ல்ல் லவ் யூடாச் செல்லக்குட்டி.. ஆன்ட்டியத் தெரியுதா? ஷிவானி மை டியர் செல்லப் பொண்ணே.. பெரிய பொண்ணா ஆயிட்டேடீ!!!" என்று இருவரையும் வாரியணைத்து முத்தமிட்டாள் காவேரி.

காவேரியின் சந்தோஷம் சுரேஷின் முகத்தில் தெரிந்தது.

"இந்தாடா முகில்.. உனக்கு பிடிச்ச மாரியோ கேம். திவ்யா ஃபேஸ்புக்ல நீ அடிக்கடி நீ சோனி ப்ளே ஸ்டேஷனில வெளயாடுற விளையாட்டுனு சொன்னா. ஆனா இந்த கேம் உன்கிட்ட இருக்கானு தெரியல" என்றாள் காவேரி.

"இல்ல ஆன்ட்டி.. இந்த கேம்தான் நான் அம்மாக்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க கரெக்டா  வாங்கிட்டு வந்திட்டீங்க" என்று ஆங்கிலத்தில் சொன்னான் முகில்.

"எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்றுக் கேட்டாள் ஷிவானி.

"உனக்கு இல்லாமலா செல்லப் பொண்ணு. உனக்காக லூம் கிட் வாங்கிட்டு வந்திருக்கேன். உனக்குத்தான் ப்ரேஸ்லட் பண்ண பிடிக்குமெ"

"தேங்கஸ் ஆன்ட்டி" என்றாள் ஷிவானி.

"ஏய் இப்படியா வந்தவங்கக்கிட்ட கிப்ஃட் வேணும்னு கேட்கிறது? என்ன இது கெட்ட பழக்கம்?" என்றாள் திவ்யா மிகக் கோவமாக.

"விடுடீ திவ்யா. அத்தைக்கிட்ட உரிமையா கேட்காம வேற யாருக்கிட்ட கேட்கப் போறாங்க" என்றாள் காவேரி.

"உனக்கு தெரியாதுடீ இந்த பிசாசுங்களப் பத்தி. எப்பப் பாரு எனக்கு இத வாங்கிக் கொடு.. அத வாங்கிக் கொடுனு பிராண்ண வாங்குதுங்க"

"என்னடீ பெத்தப் புள்ளங்கள இப்படியா கரிச்சுக் கொட்டுறது?" என்று கடிந்துக் கொண்டாள் காவேரி.

"உனக்கு தெரியாதுடீ.. என் உசிர எடுக்குதுங்க இந்த ரெண்டு வானரங்களும். எப்படா ஸ்கூலுக்கு போகும்னு நான் டெய்லி வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன்.  இந்த ரெண்டு பிசாசுங்களும் என் உயிர எடுத்திட்டுத்தான் மறு வேலை இதுங்களுக்கு" என்றாள் சலிப்புடன் திவ்யா.

இரண்டு பிள்ளைகளும் செய்யும் அனைத்து காரியங்களையும் பட்டியலிட்டு ஒப்பித்தாள். எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் காவேரி.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, சுரேஷும் கண்ணனும் தனியாக ஒதுங்கி ஸ்காட்ச் விஸ்கி அடித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் போனதே தெரியவில்லை அனைவருக்கும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தனர்.

மணி நான்கைத் தொட அவசர அவசரமாக புறப்பட்டாள் காவேரி. சுரேஷும் காவேரியும் குழந்தைகளை கட்டியணைத்து, ஆசிர்வதித்து புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற அடுத்த நிமிடமே கண்ணன் திவ்யாவைப் பார்த்து, "ஏண்டி இப்படி கொழந்தைங்கள கரிச்சுக் கொட்டின? அவங்க உன்ன என்னக்குடீ படுத்தினாங்க?" என்று சண்டைக்கு வந்தான்.

திவ்யா பொறுமையாக, "இல்லைங்க.. காவேரிக்கு குழந்தைங்க இல்ல. அவ மனசு ஏங்கிடக் கூடாதுனுதான் பிள்ளங்க எமகாததுங்கனு சொன்னேன். பாவங்க அவ" என்று பரிதாபப்பட்டாள். அங்கே நிசப்தம் நிலவியது. அனைவருக்கும் சூழ்நிலைப் புரிந்தது.

காருக்குள் நுழைந்தவுடன் காவேரி ஓவென்று அழத் தொடங்கினாள். சுரேஷ், "ஏன்மா.. என்ன ஆச்சு? இப்ப எதுக்காக அழற" என்றுக் கேட்டான்.

"எனக்கு இந்த மாதிரி கரிச்சுக் கொட்ட புள்ளைங்க இல்லாம போயிட்டாங்களே. எனக்கு அத நெனச்சாத்தான்... " மேலும் சொல்ல வார்த்தையில்லாமல் சத்தமாக அழத் தொடங்கினாள் காவேரி.

நாணயத்தின் இரு பக்கங்கள்.

0 Comments:

Post a Comment

<< Home