My world according to me

Sunday, March 15, 2015

நான் அவளை விவாகரத்து செய்கிறேன்..

எனக்கு அப்போது வயது 11 அல்லது 12 ஆக இருக்கும். வருடம் 85 அல்லது 86 ஆக இருக்கும். எங்கள் வீடு தஞ்சாவூரின் மத்திய பகுதியிலிருந்து தென்மேற்கில் தஞ்சை மருத்தவக்கல்லூரிக்கு அருகே இருக்கிறது. அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதியாக அப்போதைக்கு இருந்தது. எங்களது குடியிருப்பில் வருவாய் துறை அதிகாரிகளே அதிகமாக இருந்தனர். அதிகாரிகள் பலர் சேர்ந்து கூட்டாக வாங்கினர். மிகக் குறைவான வீடுகளே அக்கம் பக்கத்தில் இருந்தது. இன்று அந்த வளர்ச்சி முற்றுபெற்றுவிட்டது என்று எண்ணுகிறேன். எங்கள் வீட்டிலிருந்து வடக்காக போனால் தமிழகத்தின் மிகப் பிரபலமான லெக்‌ஷ்மி சீவல் ஃபேக்ட்ரி இருக்கிறது. வெற்றிலை தாம்பூலத்திற்கு பெயர் போன லெக்‌ஷ்மி சீவல்! தெற்கே போனால் கூட்டுறவு வங்கி காலனி இருக்கிறது. எங்களது வீட்டிற்கு நேர் எதிரே அரசு (அரிசி மற்றும் பாமாயில்) பாதுகாப்பு கிடங்கு ஒன்று கொஞ்சம் உள்ளடங்கி அப்போதுதான் கட்டிக் கொண்டு இருந்தனர். பிரதான சாலைக்கும் அரசு கிடங்கிற்க்கும் இடையில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடியானவர்கள் பலர் குடிசைக் கட்டி வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களது பிரதான வேலையே கட்டிடம் மற்றும் கேணி கட்டுமான பணி. சிலரது வீட்டுப் பெண்மணிகள் வீட்டு வேலைக்கும் சென்றனர். சிலர் ரிக்‌ஷாவும் ஓட்டினர். சிலர் பின்னாளில் அந்த அரசு கிடங்கில் மூட்டை தூக்கும் வேலையும் செய்தனர்.

வீட்டிற்கு அருகே குமரன் தியேட்டர் இருக்கிறது. குமரன் தியேட்டர் ஒரு மாடர்ன் outlier. மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்கள் அங்கேத்தான் திரையிடப்படும். எனக்கு அந்த குடியானவர்களின் சராசரி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவ்வப்போது அவர்களின் கலாச்சாரம் என்னில் காணலாம். குறிப்பாக இரவு இரண்டாம் காட்சி பார்ப்பது அவர்களது கலாச்சாரம். நானும் 10 மணிக்கு மேல் திரைப்படம் அவ்வப்போது கண்டது உண்டு! திங்கள் முதல் சனி வரை அயராது உழைப்பார்கள். சனிக்கிழமை குமரனில் இரவுக் காட்சி களைக் கட்டும். குறிப்பாக எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்றால் கூட்டத்திற்கு அளவே இல்லை. வார நாட்களில் இரவு இரண்டாம் காட்சி இந்த குடியானவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பழகுவதற்கு இனிமையானவர்கள். நான் பல முறை அவர்களது இல்லங்களுக்கு போயிருக்கிறேன். அன்போடு இருப்பதை உபசரிப்பார்கள்.

மழை பொழியும் ஐப்பசி மாதங்களில் இவர்களது கட்டுமான பணிகள் பாதிக்கும். அப்போது இவர்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் மைதானத்தில் பளிங்கு, பம்பரம், சூது விளையாடுவார்கள். குறிப்பாக காற்று வீசும் நாட்களில் பட்டம் விடுவார்கள். மாஞ்சா தடவி, பட்டம் விடுவதில் அவர்கள் அனைவருக்கும் ஒரு ஈடுபாடு உண்டு. கபடி விளையாடுவதிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு அவர்களுக்கு. சிலம்பம் சுழட்டுவதிலும் கைத் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

அந்த அரசு கிடங்கின் வாயிலில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. அந்த கடையிலிருந்துதான் இவர்கள் பெரும்பாலும் காலை உணவை வாங்குவார்கள். சொம்பு தளும்ப தேநீர் (டீ). 25 காசுகளுக்கு ஒரு பன் கிடைக்கும். ஒருவருக்கு ஒரு பன்.. ஒரு கிளாஸ் டீ. இதுதான் அவர்களது காலை உணவு. மதிய உணவாக பழைய சோறே. இரவு மட்டுமே சமைப்பார்கள். எஙகள் வீட்டு திண்ணையிலிருந்து இவர்கள் இரவு சமைக்கும் உணவிலிருந்து வரும் நறுமணம் அருமையாக இருக்கும். பின்னாளில் இவர்கள் இருந்த பொறம்போக்கு நிலத்தை பட்டா போட்டு கொடுத்ததில் எனது அப்பாவின் பங்கு அதிகம். அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஒரு முறை தஞ்சை வந்த போது அவர்களுக்காக பேசி பட்டா வாங்கிக் கொடுப்பதில் எனது தந்தையின் பங்கும் உண்டு. அதனால் என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

என்னதான் அந்த குடியானவர்கள் நல்லவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஒரு குறை இருந்தது. அவர்களது குடும்பத் தலைவர்கள் பெரும்வாரியானவர்கள் குடிக்கு அடிமையாக இருந்தனர். இன்று எனக்கு கெட்ட வார்த்தைகள் தெரிவதே அவ்ர்கள் மூலம்தான். குடித்துவிட்டு பிரதான சாலையில் உரக்க அனைத்து கெட்ட வார்ததைகளையும் உபயோகிப்பார்கள். என் அம்மாவிடம் அதன் அர்த்தம் நான் கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. பிறகு நானாகவே புரிந்து கொண்டேன். என் அப்பாவோ மற்ற வருவாய் துறை அதிகாரிகளோ பிரதான சாலையில் சென்றால் அமைதியாக இருப்பார்கள்.

இவர்களுக்கெல்லாம் ஒரு தலையாரி ஒருவர் இருக்கிறார். அவருக்கு இவர்கள் எல்லோரும் கட்டுப்பட்டவர்கள். என்ன பிரச்னை என்றாலும் அவரிடம்தான் முதலில் செல்லும். அவர் எடுக்கும் முடிவு இறுதியானது. அவரும் பெரும்பாலும் பாராபட்சமின்றி இருந்தவர்.

ஒரு நாள் கடைக்குச் சென்று கொண்டிருந்தவனை தலையாரி கூப்பிட்டார். ‘தம்பி அய்யப்பு, இங்க வாப்பா’ என்றார். எனக்கு கொஞ்சம் உதறல்தான். எதுக்காக என்னைக் கூப்பிடுகிறார் என்ற எண்ண ஓட்டமே ஒடியது. ‘ரெண்டு நிமிஷம் கொடுத்தீங்கனா, வீட்டுக்கு தேவையானத வாங்கிக் கொடுத்திட்டு, வீட்ல சொல்லிட்டு வர்றேனே. இல்ல அவசரமா’ என்றேன். அவர், ‘இல்ல தம்பி, நீ உன் வூட்டு ஜோலிய முடிச்சிட்டே வா’ என்றார். அம்மா சொன்ன வேலைகளை முடித்துவிட்டு போகும் வரை, ‘என்னவாக இருக்கும்’ என்ற எண்ணோட்டமே மேலோங்கியது.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தலையாரி வீட்டு வாசலுக்குச் சென்றேன். ‘வாப்பா அய்யப்பு. இப்படி உக்காரு’ என்றார். அங்கே ஒரு கணவனும் மனைவியும்  உட்கார்ந்திருந்தனர். மனைவியின் மடியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றும் இருந்தது. தலையாரி என்னிடம், ‘தம்பி, ஒரு மனு எழுதணும். நல்லா தெளிவா எழுதணும். நீ நல்லா எழுதுவேனு எனக்கு நம்பிக்கையிருக்கு. எழுதி தருகிறாயா’ என்றார். எனக்கு என்னமோ ஏதோ என்று பதறியவனுக்கு அது சற்று எளிதான வேலையாகத் தோன்றியது. ‘அதுக்கென்ன.. எழுதிட்டா போச்சு அய்யா’ என்றேன்.

கணவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்றான். அதற்கு தலையாரி காரணம் கேட்டார். அவன் சொன்னதின் சாராம்சம் இதுதான். ‘என்னை மதிக்கிறதே இல்லை. எனக்கு நல்லதா சமைச்சு போடுறதே இல்லை. எனக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க மாட்டேங்கிறா. எப்ப பார்த்தாலும் பூண்டில இருக்கிற அவங்க அம்மா வூட்டுக்கு போறா. எனக்கு அவள புடிக்கல. அவள நான் விவாகரத்து செய்றேன். தலையாரி நீங்கத்தான் எனக்கு இத முடிச்சு கொடுக்கணும்’ என்றார். அந்த கணவன் சொல்லும் எலலாவற்றுக்கும் அந்த மனைவி சிரித்து கொண்டிருந்தாள் . எனக்கு அன்று புரியவில்லை. தலையாரி என்னிடம் என்ன எழுதவேண்டும் என்று சொன்னார். அழகாகத் தெளிவாக எழுதிக் கொடுத்தேன். கைநாட்டு இட்டார்கள் இருவரும். மனைவி சிரித்துக் கொண்டே அனைத்தையும் செய்தாள்.

வீட்டுக்கு வந்ததும் அனைத்தையும் அம்மாவிடம் சொன்னேன். முடிவில் ’விவாகரத்து என்றால் என்ன அம்மா?’ என்று கேட்டேன். அம்மா எனக்கு புரிய வைத்தாள். எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. இதற்கா நான் துணைப் புரிந்தேன்? முடியாது என்று சொல்லியிருந்தால் அவர்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்றே எண்ணினேன். என்னை நானே நொந்தேன்.

அடுத்த நாள் வாரயிறுதி. குடும்பத்துடன் நாங்கள் ஏதோ ஒரு திரைப்படத்துக்குச் சென்றோம். அங்கே நான் கண்ட காட்சி.. திரையில் அல்ல.. நிஜத்தில்.. என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே கணவனும் மனைவியும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தனர். எனக்கு பல வருடங்களுக்குப் புரியவில்லை. விவாகரத்து கேட்டவர்கள் பிரிந்து இருக்கவேண்டும் அல்லவா? எப்படி பிரியாமல் இருக்கின்றனர்? அதற்கு பிறகு அவர்களுக்கு இன்னொரு குழந்தையும் பிறந்தது. அவர்கள் பிரியவில்லை. பல வருடங்களுக்கு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.

வருடங்கள் ஓடியது. இப்போது கல்லூரிக்குப் போய் கொண்டிருந்தேன். ஒரு நாள் தலையாரி என்னைக் கூப்பிட்டார். ’தம்பி இங்க வாப்பா’ என்றார். அதே கணவனும் மனைவியும். அதே நாடகம். இப்போது எனக்கு புரிந்தது. நம்பர் கடையில் தலையாரியும், கணவனும் சாராயம் குடித்திருந்தனர். இருவரும் போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது இருந்தனர். ஏழை, படிப்பறிவு இல்லை என்றாலும் அந்த மனைவியின் உறுதி என்னை இன்று வரை வியப்பில் ஆழ்த்துகிறது. நண்பர்கள் சிலர் நேற்று காரடையான் நோன்பு கொண்டாடுகிறார்கள். இந்த குடியானவர்கள் அதனை கொண்டாடி நான் பார்த்தது இல்லை. இருப்பினும், அவள் தெளிவாக இருக்கிறாள். அவள் மீது எனக்கு மரியாதை அப்போது வந்தது. இன்று பல மடங்காக கூடியிருக்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home