My world according to me

Tuesday, July 29, 2014

ஒன்னும் ஒண்ணும் ரெண்டு

நளினிக்கு அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருகிறது. தோழிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடபுடால் விருந்து ஏற்பாடு ஏற்கனவே செய்துவிட்டாள். குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரண்டு பேரை நியமித்து விட்டாள். கேக் ஆர்டர் செய்துவிட்டாள். எல்லாம் முடிஞ்சுது, ஆனா “விருந்துக்கு என்ன புடவை கட்டலாம்” என்று யோசித்தாள். அவளுடைய அறையில் இருந்த புடவைகளை எல்லாவற்றையும் எடுத்து கீழே போட்டாள். எல்லா புடவைகளையும் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்துவிட்டாள்.  கட்டுவதற்கு அவளிடம் புது புடவை இல்லை. புதுசுதான் வாங்கணும் என்று யோசித்தாள். அவளதுத் தோழி கவிதாவுக்கு மெசேஜ் அனுப்பினாள். ”லதாங்கி புடவை விற்பவள் தொலைப்பேசியும், முகவரியும் அனுப்பேன்” என்று கேட்டிருந்தாள். அடுத்த ஐந்து நிமிடத்தில், “ஏண்டி எத்தனை தடவ போனாலும் உனக்கு ஞாபகமே இருக்காதா.. இந்தா நீ கேட்ட அட்ரஸ் இங்க இருக்கு. நானும் வரட்டுமா, எனக்கும் புது புடவை எடுக்கணும்?” என்று கவிதா கேட்டிருந்தாள். மனதுக்குள் சிரித்துக் கொண்டே, கவிதாவுக்கு ஃபோன் செய்தாள்.

“நீயும் வர்றீயாடி.. ரொம்ப வசதியாப் போச்சு. இரு சுரேஷ்கிட்ட குழந்தைங்கள பாத்துக்க சொல்லிட்டு, நானும் ரெடியாறேன். என் வீட்ட தாண்டித்தானே போகணும், நீயே கார் எடுத்துக்கிட்டு வந்திடு. சேர்ந்தே போவோம்”

”நானும் கெளம்ப கொஞ்ச நேரமாகும். 30-35 நிமிஷத்துல வர்றேன்டி” என்றாள் கவிதா.

“என்னங்க.. நான் கவிதாவோட வெளியப் போறேன். அடுத்த வார பார்ட்டிக்கு புதுப் புடவ வாங்கப் போறேன். பையனுக்கு சாப்பாடு கொடுத்திட்டேன். அவன பாத்துக்கோங்க” என்றாள் நளினி.

“இல்ல என்னால முடியாது. எனக்கு ஆபிஸ்ல வேலையிருக்கு. நாளைக்கு ஒரு பிரசண்டேஷன் இருக்கு. நான் இன்னும் ரெண்டு நிமிஷத்துல கெளம்பறேன்” என்றான் சுரேஷ். கிடுகிடுவென லாப்டாப்பை மடக்கி பையில் வைத்தான்.

”ஞாயித்துக்கிழமை அதுவுமா என்னங்க ஆபிஸ்” என்ற அவளது கேள்வியைக் கூட காதில் வாங்காமல், டிரஸ் மாத்திக் கொண்டு நிமிஷமாய் புறப்பட்டான்.

நளினிக்கு பயங்கர கோபம் வந்தது. இருந்தாலும் வேலை என்றுச் சொன்னதால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதுவே கிரிக்கெட் விளையாடப் போறேன் என்று சொல்லியிருந்தால். பையனையும் சேர்த்து அனுப்பி இருப்பாள். சரி அவனையும் கூட்டிக் கொண்டு போவோம் என்று எண்ணிக் கொண்டே லதாங்கிக்கு ஃபோன் செய்து, வீட்டில் இருப்பாளா என்பதை உறுதி செய்துக் கொண்டு குளிக்கப் போனாள்.

லதாங்கி வீட்டை வேக வேகமாக சுத்தம் செய்தாள். அவளுடைய ஏழு வயது பெண் சுபத்ரா, “அம்மா எனக்கு ஒரு ஐபாட் வாங்கித் தர்றேன்னு சொன்னியே. இன்னிக்குப் போலாமா?”

“இப்ப முடியாது. வீட்டுக்குப் புடவை வாங்க ரெண்டு ஆண்ட்டி வர்றேனு ஃபோன் பண்ணியிருக்காங்க. அவங்க போனப்புறம் பாக்கலாம்” என்றாள்.

“கட்டாயம் வாங்கி தரணும்”

“சரி.. சரி”

வீட்டைச் சுத்தம் செய்து முடித்தாள். அவளிடம் இருந்த எல்லா புடவைகளையும் அழகாக அடுக்கி வைத்தாள். மசாலா டீ போட்டு முடித்த அதே வினாடி காலிங் பெல் அடித்தது.

”இதோ வர்றேன்” என்றபடியே கதவை திறந்து விட்டாள்.

கவிதாவும், நளினியும் உள்ளே வந்தனர்.

”வாங்க. டீ சாப்பிடுறீங்களா” என்றாள் லதாங்கி.

”இல்ல லதா. நாங்க வர்ற வழியில ஸ்டார்பக்ஸ்ல காஃப்பி குடிச்சிட்டுத்தான் வர்றோம். நீங்க குடிங்க”

“சரி உக்காருங்க. இதோ வர்றேன்.” உள்ளேப் போய் ஒரு டம்ப்ளரில் டீயை குடித்துவிட்டு வந்தாள்.

“சொல்லுங்க என்ன புடவை காட்டட்டும்?”

“ம்ம்ம் டிசைனர் புடவை காட்டுங்க மொதல்ல” என்றாள் நளினி.

“என்ன விஷேசத்துக்கு கட்டப் போறீங்க?”

:”அடுத்த வாரம் என் பர்த்டே. அதுக்குத்தான்! டேய் தம்பி, இங்கயே இரு எங்கயும் போகாதே. அம்மா பக்கத்துலயே இரு” என்றாள் பையனை நோக்கி.

லதாங்கி ஒவ்வொரு புடவையாகக் காண்பித்தாள். நளினிக்கும், கவிதாவுக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை.

"இதக் காட்டுங்க.. அந்த பிங்க்.. ம்ம்ஹூம்.. சரியில்ல.. அந்த கோல்டன் கலர்.. ம்ம்ஹூம்.. அந்த அரக்கு கலர்.. என் கலருக்கு சூட் ஆகாது.. இத ட்ரை பண்றேன்.. இது நல்லாயிருக்கா.. ” என்று கவிதாவும், நளினியும் மாறி மாறி ஒரு மணி நேரத்தை ஓட்டினர்.

“என்ன இன்னிக்கு நீங்க வாங்குற ஐடியா இல்லையா?!” என்று கேலியாகக் கேட்டாள் லதாங்கி.

நளினிக்குக் கோபம் வந்துவிட்டது. காட்டிக் கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டே இன்னும் அரை மணி நேரம் இருவரும் பார்த்தனர். ஒரு கணத்தில் மூவருக்கும் அலுத்துவிட்டது. நளினி மட்டும் இரண்டு புடவைகள் நானூறு டாலர்கள் கொடுத்து எடுத்தாள். கவிதா அடுத்த முறை எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாள். லதாங்கி பொறுமையாக எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துவிட்டு, புடவையை ஒரு பையில் போட்டுக் கொடுத்தாள்.

காரில் பையனை உட்கார வைத்து, சீட் பெல்ட் போட்டுவிட்டு, தானும்  உட்கார்ந்தது சீட்டு பெல்ட் போட்டதும், “என்ன கிண்டல் பார்த்தியா அவளுக்கு? ஒன்னும் ஒழுங்காவே இல்ல. ஆனா பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. வேற வழியில்லாம ரெண்டு எடுக்கவேண்டியதாப் போச்சு. ஹூம்” என்றாள் நளினி.

“ஆமாம்டி. நம்ம குரூப்ல இத போட்டு இவக்கிட்ட வாங்காதீங்கனு சொல்லணும்!”

வீட்டுக்கு வந்ததும் பையனோடு இறங்கிக் கொண்டாள். கவிதா அப்படியே வீட்டுக்கு கிளம்பினாள். உள்ளே வந்து புடவையை எடுத்து வைக்கப் பையைப் பிரித்தாள். அங்கே இரண்டுக்கு மூன்று புடவைகள் இருந்தது. ஒரு கணம் திருப்பிக் கொண்டுப் போய் கொடுக்கலாம் என்று நினைத்தாள்.

“ம்ம்ம்ம்... என்னைக் கிண்டல் செஞ்சாளே அவ. அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு. இந்த புடவய நாமளே வெச்சிப்போம்” என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டாள். டிவியை ஆன் செய்தாள்

லதாங்கி எல்லாப் புடவைகளையும் அதற்குரிய பையில் எடுத்து வைத்து மீண்டும் ஷெல்ஃப்பில் வைத்தாள். கடைசி புடவை எடுக்கும் போது அங்கே சுபத்ரா கேட்டது போலவே ஒரு ஐபாட் இருந்தது. இது நிச்சயம் அந்த நளினியின் பையன் விட்டுச் சென்றதாகத்தான் இருக்கும். அவர்களைக் கூப்பிட்டு கொடுக்கலாம் என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் தன்னுடைய நேரத்தை வீணடித்ததும் இல்லாமல் அவளிடம் வைரட்டியா இல்லை என்று இருவரும் பேசிக் கொண்டது நினைவுக்கு வந்தது. கையில் எடுத்த ஃபோனை வைத்துவிட்டு டிவியை ஆன் செய்தாள்.

அங்கே ரஜினியின் அண்ணாமலை படம் ஓடிக் கொண்டிருந்தது. தலைவர், “கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்” என்று ராதாரவியைப் பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தார். லதாங்கிக்கும், நளினிக்கும் அது ஒரு மன நிறைவைத் தந்தது அந்த டயலாக்!!

0 Comments:

Post a Comment

<< Home