My world according to me

Friday, March 13, 2015

லெக்‌ஷ்மியும் கன்னுக்குட்டியும்

பள்ளிக்கு போனக் காலத்துல கடைசி பரீட்சை எழுதி முடிச்சு வெளிய வந்ததும் வெள்ளை சட்டை பூரா இங்க்கா இருக்கும்! நம்ம கூட்டாளிங்க ரெண்டு பேனா வெச்சிருப்பானுங்க. ஒன்னுல பரிட்சை எழுத. இன்னொன்னுல இங்க்கும் வாழைத் தண்டு சாரும் கலந்து வெச்சிருப்பானுங்க. அந்த பேனாவால சட்டையில் இங்க் அடிச்சா, நம்ம சட்டை என்ன தொவச்சாலும் கறை போகவே போகாது. பரீட்சை முடிந்ததும் பள்ளியை விட்டு  வெளியே வந்ததும் தொடங்கும் இந்த இங்க் போராட்டம். சிலருக்கு சட்டையில் மட்டும்தான் இங்க். என்னைப் போன்ற மாவீரனுக்கு முகமெல்லாம் இங்க். ஒரு வ்ழியாக போர் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் வீட்ல டின்னு காட்டுவாங்க அம்மா! அப்படியே நாலு துணிமணிய ஒரு பையில அடைச்சு வெச்சு கிராமத்துல இருக்குற ஒரு வெட்டி பய இதுக்குனே இருக்கான், அவன் கூட பாட்டி வீட்டுக்கு அனுப்பி வெச்சிருவாங்க. அந்த வெட்டி பயக்கிட்ட காசக் கொடுத்துருவாங்க. நம்ம கையில கொடுத்த நாம தொலச்சிருவோமாம். அவன் பிசுனாரி பய, அம்மாகிட்ட எனக்கு ஃபுல் டிக்கெட்டுக்கு காசு கரெக்டா வாங்கிட்டு பஸ்ல போகும்போது அரை டிக்கெட் எடுத்துருவான். என்ன வேற நிமிர்ந்து உக்காராதனு அதட்டுவான். நிமிர்ந்தா உயரம் தெரிஞ்சிரும்ல. அப்படி மிச்சம் புடிச்ச காசுல அன்னிக்கு சாயங்காலமே நம்பர் கடையில தண்ணிய போட்டு பாட்டி வூட்டுக்கு வந்து ’உங்க மருமக ஒன்னும் சரியில்ல ஆச்சி.. மரியாதையே தெரியல அவங்களுக்கு. காஃப்பி தண்ணி கூட கொடுக்கல.’  நான் மனசுக்குள்ள் , “நாதாரிப் பய.. அம்மா வெச்ச வெண்பொங்கல முழுசா துண்ணுட்டு வாய் கிழிய பேசுது பாரு பக்கி பண்ணாடை” திட்டிக்குவேன். என் பாட்டியும் `அவ எப்பவுமே இப்படித்தான். பெரியவங்களையே மதிக்கிறது இல்ல. இதுல உன்ன மதிச்சிட போறாளாக்கும். இந்தா இந்த ரெண்டு ரூவாய வெச்சுக்க. வேற என்ன சங்கதி?’ பிசுனாரி பய இந்த ரெண்டு ரூவாவுக்கு எங்க அம்மாவ பொரணி பேசுது. இவன என்ன பண்ணலாம்.. வுடுங்க அப்புறம் ஒருநாள் அவன் கோவணத்துகுத் தீ வெச்ச கதை சொல்றேன்.

பாட்டி வூட்ல பாட்டியும் சித்தப்பாவும் மட்டும்தான். கிராமத்துக்குள்ள நுழைஞ்சதும், பாட்டி வீடுதான் மொத வீடு. பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துலயே வீடு. பாட்டி வீடு சுத்தியும் மரங்கள். எந்த கோடைக்கு போனாலும் பாட்டி வீடு சிலு சிலுனு இருக்கும். வெளிய சுட்டெரிக்கும் வெயில். வீட்டுக்குள்ள ஃபேனே தேவையில்ல. நைட்டு நல்லா குளிரும். பெரிய திண்ணை. திண்ணைல பெரிய மேஜை, நாற்காலி, பேடு, மூணு கலர் பேனா, பேப்பர் வெயிட்டு, கத்தையா பேப்பரு எல்லாம் இருக்கும். தாத்தா அந்த காலத்துல ஊருக்கு கணக்குபுள்ள. தாத்தா இருந்த வரைக்கும் காலைல ஊர் ஜனங்க யாராவது வந்து தாத்தவ மனு எழுதிக் கொடுக்க சொல்லுவாங்க. அவரும் பொறுமையா எழுதிக் கொடுப்பாரு. பாட்டிக்கு நல்ல காது. திண்ணைல சொல்றத அடுப்படில உக்காந்து கேப்பா. ‘அவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’னு லைவ் micro blogging லெவலுக்கு comment கொடுப்பா. தாத்தா போய் சேர்ந்தப்புறம் சித்தப்பா இந்த வேலைய செஞ்சிக்கிட்டு இருந்தாரு. அப்படியே வய வாய்க்கா தோப்புனு பொழுத ஓட்டிக்கிட்டு இளந்தாரியா சுத்திக்கிட்டு இருக்காரு சித்தப்பா!

பாட்டி அருமையாக சமைப்பாள். அதைவிட பிரமாதமாக காஃப்பி போடுவாள். பாட்டி வீட்டில் மாடு இருப்பதால் எந்த நேரம் காஃப்பி கேட்டாலும் கிடைக்கும். பாட்டி வீடு எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். அதுக்கு காரணம், வீட்டுக்கு பின்னாடி பெரிய கொல்லப்பக்கம். அதுக்கும் பின்னாடி ஒரு அழகான குளமிருக்கு. கொல்லைப்புறத்தின் முடிவில் ஒரு பூவரசம் மரமிருக்கு. அதன் கிளைகள் எறுவதற்கு லகுவாக இருக்கும். அருகில் குளம் என்பதால் அந்த மரம் குளத்தின் மீது தவழ்ந்து படர்ந்திருக்கும். அதோட கிளையிலிருந்து குளத்துள்ள குதிக்கலாம். கொல்லைப்புறத்தின் நடுவே பெரிய மாட்டுத் தொழுவம். தொழுவத்தின் பின்பக்கம் வைக்கோல் போர் இருக்கும். கறவைக்கு ரெண்டு மாடு. வயலுக்கு ரெண்டு மாடு. நாலு ஆடு, ஆட்டுக்குட்டிங்க். அஞ்சாறு கோழி, ஒரு சேவ, ஒரு நாய், பத்தாதுக்கு ஒரு பூனை இருக்கு. இது போதாதா ஒருத்தனுக்கு? எனக்கு இந்த வாயில்லா பிராணிகள் எல்லாத்துக்கிட்டயும் பாட்டி மாதிரியே பேசுவேன். அதுல குறிப்பா லக்‌ஷ்மினு ஒரு மாடு. அத சின்ன கன்னுக்குட்டிலேர்ந்து வளர்க்கிறா பாட்டி. அதுக்கு நானுனா ரொம்ப பிரியம். பாட்டி லக்‌ஷ்மிகிட்ட ’அய்யப்பன எழுப்பு’னு சொல்லிவிடுவா. கொல்லப் பக்கதிலேர்ந்து முன்னாடி வந்து என்ன கண்ணத்துல நக்கி எழுப்பும். லக்‌ஷ்மி ரொம்ப அழகா இருப்பா. செந்நிறமா இருக்கும் அவ உடம்பு. ஆனா முகத்துல அழகா கருப்பும் வெள்ளையும் பாக்க லட்சனமா இருப்பா. அவ எங்க இருந்தாலும் லெக்‌ஷ்மினு கூப்பிட்டா போதும் திரும்பி பார்ப்பா. எனக்கு அவக்கிட்ட பிடிச்சதே அந்த சொர சொர நாக்க வெச்சுக்கிட்டு நெத்தில நக்குவா. கூசும்.. இருந்தாலும் சொகமாயிருக்கும். அப்படி செஞ்சா தலமுடி நல்லா வளரும் எவனோ சொல்ல அவகிட்ட டெய்லி தலய காமிக்கிறது வழக்கமாகி போச்சு. பாட்டி எனக்கு கொடுத்த ஒரே வேலை, கடைக்கு போய் ரெண்டு நாளைக்கு ஒரு தடவ போயி வீட்டுக்கு தேவையானதும் புண்ணாக்கும் வாங்கிட்டு வர சொல்லுவா. முக்கியமான ஒன்ன சொல்ல மறந்துட்டேன். லெக்‌ஷ்மி என்னையும் பாட்டியையும் மட்டும்தான் கிட்ட விடுவா. சித்தப்பா கிட்டப் போன மிரளுவா. மத்தவங்கள முட்டுவா. கழனித் தொட்டில புண்ணாக்கப் போட்டு கிளறிவிட்டுக்கிட்டே தண்ணி காட்டணும். எனக்கு ரொம்ப பிடிச்ச வேலையது. ஒவ்வொரு மாடா காட்டணும். லெக்‌ஷ்மிக்கு மட்டும் ஸ்பெஷல். நான் கொஞ்சம் தனியா எடுத்து வெச்சிருப்பேன். அவளுக்கு என் கையால கொடுப்பேன். திண்ணுட்டு கைய நல்லா நக்குவா. இன்னும் வேணும்னு தலையையும் காலையும் உதைச்சு கேப்பா. இப்ப நெனச்சாலும் மனசுக்கு நிறைவாயிருக்கு.

எட்டாவது முடிச்சு கோடைக்குப் பாட்டி வீட்டுக்கு போனப்ப பாட்டி வூட்ல லெக்‌ஷ்மி மட்டும்தான் இருந்தா. இன்னொரு கறவை மாடு இல்ல. பாட்டிய கேட்டேன். `கொஞ்சம் பண தேவைப் பட்டுச்சு. வித்துட்டோம்டா பேராண்டி’னா. ’நீ பக்கத்து வீட்டுக்கு  போயி பால் வாங்கிட்டு வா. காஃப்பி போடுத் தர்றேன்’னு சொன்னா. எப்பவும் பால் வித்துத்தான் பாட்டிக்கு பழக்கம். இந்த தடவ பால் வாங்கிட்டு வானு சொன்னது எனக்கு வித்தியாசமா இருந்திச்சு. இந்த தடவ லெக்‌ஷ்மி வளர்ந்து பெருசா தெரிஞ்சா. ’ஏன் பாட்டி, லெக்‌ஷ்மி பால தரமாட்டாளா”னு கேட்டேன். `அவ இப்பத்தான் மொத மொத செனையா இருக்கா. நீ வந்துட்டேல. அழகான கன்னுக்குட்டி ஒன்னு தருவா. அப்புறம் அவளே பால் தருவா’னு சொன்னா. எனக்கு கொஞ்சம் புரிஞ்சது மாதிரி தெரிஞ்சாலும், புரியாததுதான் அதிகம். லெக்‌ஷ்மிய பாக்க பாவாமியிருந்துச்சு. செல்லமா தடவிக் கொடுத்தேன். அவ வழக்கம் போல தலைய நக்கிவிட்டு பாசமா இருந்தா. நான் வந்ததுக்குப்புறம் லெக்‌ஷ்மி ரொம்ப சந்தோஷமாயிருக்கானு பாட்டி சொல்லிக்கிட்டே இருந்தா.

பாட்டி வீட்டு பெட்ரூம்லேர்ந்து பார்த்தா கொல்லபக்கம் நல்லா தெரியும். லெக்‌ஷ்மிய ஜன்னல் பக்கத்துலயே கட்டிப் போட்டு எப்ப கன்னு போடுவானு பாக்குறது வழக்கமா போச்சு. பாட்டி, ‘டேய்ய் அவளை பாத்துக்கிட்டே இருக்காதே. கண்ணு பட்ரும். நீ போயி வெளையாடு. நான் கன்னு போட்டதும் சொல்றேன்’ சொல்லிக்கிட்டே இருந்தா. இரண்டு வாரமாச்சு. சித்தாப்பாகிட்ட, பாட்டிக்கிட்ட, வேலைக்கு வர்றவங்க கிட்டனு எல்லாரையும் நச்சரிச்சுக்கிட்டே இருந்தேன். அவகிட்டயே கேட்டேன். அவளுக்கு சொல்லத் தெரியல.

ஒரு நாள் மதியான நேரம் நல்லா உச்சி வெயிலு பொளந்து கட்டுது. அப்பப் பாத்து லெக்‌ஷ்மி கத்த ஆரம்பிச்சுட்டா. தூங்கிட்டு இருந்த பாட்டிய எழுப்பி, ‘பாட்டி, லெக்‌ஷ்மி கன்னு போட போறானு நெனக்கிறேன். வா வந்து பாரு. பயமாயிருக்கு’னு சொன்னேன். சித்தப்பா வேற இல்ல. பாட்டி வந்து பாத்துட்டு, ‘நீ போ உள்ள. இதெல்லாம் நீ பாக்கக் கூடாது’னு சொல்லிட்டா. இருந்தாலும் ஜன்னல் வழியா பாத்துக்கிட்டே இருக்கேன். லக்‌ஷ்மி உட்கார்றா, படுக்கிறா, எழுந்திருக்கிறா, கத்துறா.. இதையே திரும்ப திரும்ப பண்ணிக்கிட்டே இருக்கா. அதுக்குள்ள சித்தப்பா வந்து சேற எனக்கு தெம்பு வந்திருச்சு. அவர பாத்ததும் அம்ம்மானு கத்தினா லெக்‌ஷ்மி. அவளுக்கு தெரியும் போல யாரு உதவுவாங்கனு. சித்தப்பாவும், பாட்டியும், இன்னு ரெண்டு வேலையாளுங்களும் பத்திரமா கன்னுக்குட்டிய வெளிய எடுத்தாங்க. யாரோ ஒருத்தரு, ‘கடாவா கடேரியா’னு கேக்க.. ‘கடேரி’னு சித்தப்பா சொன்னாரு. அதெல்லாம் என்னான்னு அப்ப புரியல. கன்னுக்குட்டிய முச்சு விட வெக்க அது மூக்குக்குள்ள என்னமோ பண்ணினாங்க. அதுவும் மூச்சு விட ஆரம்பிச்சுச்சு. கன்னுக்குட்டிய லெக்‌ஷ்மிகிட்ட விட்டுட்டாங்க. குட்டி லெக்‌ஷ்மிய நக்கிக்கிட்டே செல்லமா ஏதோ சொல்லிக்கிட்டே இருக்கா லெக்‌ஷ்மி. குட்டி லெக்‌ஷ்மி மெல்ல எழுந்திரிச்சு அம்மாக்கிட்ட போய் பால் குடிக்க ஆரம்பிச்சுட்டா. பாட்டி சித்தப்பாவ பக்கத்துல விடுறா.. மத்தவங்கள பக்கத்துல ஒரு அடிக் கூட விடல. நான் பக்கத்துல போயி பாக்கலாம்னா பாட்டி விட மாட்டேனுட்டா. நான் அடம் புடிக்க, சித்தப்பா கிட்டக் கூட்டிக்கிட்டு போனாரு.

லக்‌ஷ்மி என்னை ஒன்னும் செய்யல. அவ தலைய தடவிக் கொடுத்தேன். நிமிர்ந்து பாத்தவ தலைய கீழ போட்டு குட்டிய நக்கிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டா. எனக்கு ஒரு பக்கம் குட்டிக் கன்னுக்குட்டிய பாத்த சந்தோஷம். ஆனா லக்‌ஷ்மி இப்படி மாறுவானு நெனக்கவே இல்ல. பாட்டிக் கிட்ட ’ஏன் பாட்டி இப்படி பண்றா’னு கேட்டேன். ‘அடேய்.. அவளுக்கு மொத புள்ளடா. அவள பாத்துட்டு பால ஊட்டிட்டு உன்ன பாப்பாளாக்கும்’னு சொன்னா. நாலு நாள் ஆச்சு. லக்‌ஷ்மி சந்தோஷமாத்தான் இருந்தா. ஆனா என்னவோ தெரியல முன்ன மாதிரி இல்லைனு எனக்கு தோணுச்சு.

நாலு நாளா யோசிச்சு யோசிச்சு படுத்தவனுக்கு அன்னிக்கு நல்லா தூங்கிட்டேன். காலைல யாரோ நக்குறது போல இருந்துச்சு. எழுந்திருச்சு பாக்குறேன்.. குட்டி லெட்சுமிய்ய்ய்ய். ரெண்டு நிமிஷம் பக்கத்துல இருந்து விளையாடினவ, துள்ளி குதிச்சு அம்மாகிட்ட போயிட்டா. சந்தோஷமா கொல்லபக்கம் போனா.. லக்‌ஷ்மி என்னைப் பாத்ததும் கால உதைச்சுக்கிட்டு தலைய வேகமா மேலும் கீழும் ஆட்டினா. சந்தோஷமா கூப்பிட்டா. குட்டி லெக்‌ஷ்மி பால் குடிச்சிக்கிட்டு இருந்த நேரம், என் தலைய வழக்கம் போல தன் சொர சொர நாககால தடவிக் கொடுத்தா. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.

0 Comments:

Post a Comment

<< Home