My world according to me

Monday, May 04, 2015

விடியும் வரை காத்திரு

எப்போதாவது முக்கியமான ஒருத்தரையோ அல்லது முக்கியமான பொருளுக்காகவோ காத்திருந்திருக்கிறீர்களா? இடைப்பட்ட நேரத்தில் வெறுமனே காத்திருக்கவேண்டும். முக்கிய நபரை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள் பார்த்து தகவல் சொல்வதற்காக அல்லது முக்கிய பொருளை பெறுவதற்காகவோ பல மணி நேரம் காத்திருக்கவேண்டும். அந்த பல மணி நேரமும் வேறு எந்த வேலையையும் பார்க்கப் போக முடியாது. இடைப்பட்ட நேரத்தில் ஒருவேளை அவர் வந்திட்டு போயிட்டார்னா? அந்த மூன்று நான்கு மணி நேரம் நம்மைச் சுத்தி என்னதான் நடக்கும்? அப்படி ஒரு நாள் நள்ளிரவு முதல் விடியும் வரை நான் முதல் முறையாக விழித்திருந்து காத்திருந்தேன். எதற்கு? 35 லிட்டர் பாலுக்காக.

அடுத்த நாள் நெறைஞ்ச முகூர்த்த நாள்! சித்தப்பா வீட்டு கிரஹபிரவேஷம்!

சித்தப்பா என்னிடம், “தம்பி, நீயும் உன் மாமனும் கும்பகோணம் போயி, அண்ணா பால் டெப்போல 35 லிட்டர் பால் வாங்கிட்டு வந்திருங்க. அங்கத்தான் மொத்தமா கெடைக்கும். வெள்ளன போகணும். இங்கேர்ந்து காலைல போனா பால் கெடைக்காது. அதனால நீங்க ரெண்டும் பேரும் ராத்திரி கடைசி பஸ்ல கும்போணம் (கும்பகோணம்) போயி, சினிமாவுக்கு போங்க. அப்படியே சினிமாவ முடிச்சிட்டு  டெப்போக்கு போங்க. மொத பால் ரெண்டு மணிக்கெல்லாம் வந்திரும். வாங்கிட்டு வெரசா வீட்டுக்கு வந்து சேருங்க. காலைல நீங்க வாங்கிட்டு வர்ற பாலுலதான் எல்லாத்துக்கு காப்பி. இந்தா பணம்.”

“சித்தப்பா.. நானா? இவ்வளவு பெரிய வேலைய என்கிட்டச் சொல்றீங்களே?” சற்றுத் தயங்கினேன்.

“டேய்.. வளர்ந்து கெட்டவனே.. நீ பத்தாவது முடிச்சிட்ட. இந்த வயசுல உங்கொப்பனும் நானும் பண்ணாத சேட்டையில்ல. நீ சின்னப் புள்ளையா என்ன? அதான் கூட உனக்கு தொணையா மாமன் வர்றான்ல. அப்புறம் என்ன? சினிமாவுக்கு போனு நானே சொல்றேன்.. அப்புறம் என்னடா?” குரலில் கடுமை தென்பட்டது.

“அதுக்கில்ல சித்தப்பா. நான் ராத்திரி வெளிய தங்கினது இல்ல. அம்மா எதாவது சொல்லுவாங்களோ.. அதான் யோசிக்கிறேன்.”

“நான் சொல்லிக்கிறேன்... நீ போயிட்டு வாடா” ஒரு முடிவோடுதான் அவரிருந்தார்.

“சரி சித்தப்பா.” வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டேன். நான் தயங்கினது அத்தை மகள் இருக்கிறாளே... அவகிட்ட அன்னிக்கு நைட்டு பேசணும்னு நெனச்சேன். சிவ பூஜைல கரடியாட்டம் சித்தப்பா காரியத்த கெடுத்திட்டாரு. ஒருவேளை தெரிஞ்சுதான்  செஞ்சிருப்பாரோ?

இரவு எட்டு மணி ஆனது. சாப்பாடு முடிஞ்சதும் நானும் என் மாமனும் (அப்பா-சித்தப்பாவின் கசின் பிரதர்.. வயது என்னைவிட நான்கு வயது பெரியவன்(ர்). ஒரே வயதை ஒத்தவன் என்பதால் வாங்க போங்க மரியாதை இல்லை.. வாடா போடாத்தான். கும்பகோணம் கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்) கெளம்ப தயாரானோம்.

சித்தப்பா என்னிடம், “டேய் மொத பஸ்சு வர்றதுக்குள்ள வந்திருங்கடா. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. முகூர்த்த நாள் வேற... பாலுக்கு ஏக கிராக்கியா இருக்கும். கவனமா கொண்டு வந்து சேர்த்திருங்க. ஒரு லிட்டர் பாக்கெட்டா கேட்டு வாங்குங்க. அரை லிட்டராயிருந்தாலும் பரவால.“

”சரி சித்தப்பா. அம்ம்ம்மா நான் கும்போணம் போயிட்டு வர்றேன்” உரக்கக் கத்தினேன். அத்தை மகள் காதில் விழட்டுமேயென்று. கடைக்கண் பார்வை கிட்டாதா என்ற எண்ணமே. அத்தை மகள் எட்டிப் பார்த்தாள். பார்வையில் ஆயிரம் வினா.. கணப் பொழுதில் பலாயிரம் சம்பாஷணைகள். இதயம் வெளியே குதித்து ஓடியது அவளிடம். என் புருவத்தை வளைத்து தலைச் சாய்த்து “போயிட்டு வர்றேன்” என்றேன் சாடையில். பதிலும் வந்தது. நிறைவான மனதுடன் கிளம்பினேன்.

“ஏண்டா சம்முவம் (சண்முகம்) எந்த படத்துக்குடா போறது?”

“புதிய பாதை போலாம்டா?”

“யாரு படம்டா அது?”

“புதுமுகம்டா. படம் நல்லாயிருக்காம். போவோமா?”

“சம்முவம் நீ சொல்லிட்டா அதுக்கு அப்பீலே இல்ல. படம் போறதுக்கு முன்னாடி எனக்கு பரோட்டா ஆம்லெட் சாப்பிடணும்டா...”

“சரிய்ய்ய்.. ஏண்டா நாம ஆம்லெட் சாப்பிடுறது அத்தைக்கு (என் பாட்டி) தெரிஞ்சா.. பத்ரகாளி ருத்ர தாண்டவம் ஆடிருவாடா.”

“விட்றா. யாருக்கு தெரியப் போகுது? முட்டைத்தானே... நாம என்ன முட்டையோட அம்மாவா திங்கப்போறோம்?!”

பேசிக் கொண்டிருக்கும் போதே 3ஆம் நம்பர் வண்டி கும்பகோணம் பேரூந்து நிலையம் வந்துவிட்டது. மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அந்த நேரம்கூட என்ன அவசரமோ, பலர் முண்டியடித்துக் கொண்டு பஸ்சிலிருந்து இறங்கினர். இறங்கியதும் எனக்கு கும்பகோணம் புதிய பேரூந்து நிலையம் மிகப் பெரியதாக தோன்றியது. இயல்பிலிருந்து சற்று விலகி வந்து பார்க்கும் பார்வை அலாதியானது. தினமும் அலுவலகம் சென்று வரும் நாம், ஒரு நாள் அலுவலகம் போகாது, காலை பதினொரு மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்து அருகில் இருக்கும் பூங்காவுக்கு சென்றால் மொத்தமும் அந்நியமாகத் தோன்றும். இத்தனைக்கும் அது பழகிய பூங்காவாகத்தான் இருக்கும். இருந்தாலும் இயல்பிலிருந்து விலகி பார்க்கும் போது நம் மனதின் பார்வை புதிதாகயிருக்கும். அப்படித்தான் அன்றிரவு கும்பகோணம் பேரூந்து நிலையம் இருந்தது.

ஒரு புறம் நகரப் பேரூந்தும், மறுபுறம் மொஃபசில் பேரூந்தும் வரிசையில் நின்றன. பழக்கடை, பூக்கடை, பேப்பர் கடை, டீக்கடை, சாப்பாட்டு கடை என்று பஸ்ஸடாண்ட் ஏகத்துக்கும் பிசியாக இருந்தது. நாமளும் பெரிய ஆளாயிட்டோம்டா என்கிற எண்ணம் கரை புரண்டு ஓடியது. மனதில் ஒரு கெத்து முளைத்தது. ரோட்டுக்கடை ஒன்றில் அமர்ந்தோம்.

இலையை போட்டுக்கொண்டே, “என்ன சாப்பிட வேணும்?” என்றார் அங்கே வேலை செய்பவர். தூக்கிக் கட்டிய கைலி, கருப்பு பனியன், பனியனுக்கு வெளியே வெள்ளையில் கருப்பு கட்டம் போட்ட சட்டை. பட்டன் திறந்து விடப்பட்டிருந்தது. சுருள் முடி.. முறுக்கிய மீசை. பார்ப்பதற்கே கொஞ்சம் மிரட்டலான ஆளாகத் தெரிந்தார்.

எனக்கு பரோட்டா என்றால் ரொம்ப பிடிக்கும். “ரெண்டு பரோட்டா. அப்படியே ஆம்லெட் ஒன்னு. வெங்காயம் தூக்கலா.”

சண்முகம், “நெய் ரோஸ்ட் ஒன்னு.. ஒரு ஆம்லெட்.”

எப்போதும் வேக வேகமாக சாப்பிடும் நான் அன்று என்னமோ சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். ”மெட்ராஸ், திருச்சி, புதுக்கோட்ட, மதுரை, சேலம், நாமக்கல், பண்ருட்டி, விழுப்புரம்”னு ஆங்காங்கே கூவிக் கூவி பஸ் ஏஜெண்ட்டுகள் மக்களை கூப்பிட்டுக் கொண்டு இருந்தனர். குடும்பத்தை அவசர அவசரமாக இழுத்துக் கொண்டு விழுப்புரம் பஸ்சில் ஏறினார் ஒரு அப்பா. திருமண இளஞ்ஜோடி ஒன்று தஞ்சாவூர் பஸ்சில் ஏறினர்.  ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள் சைக்கிளில் ரோந்து போய்க்கொண்டு இருந்தனர். சூடான கல்லில் கொத்து பரோட்டா போடும் சத்தம் காதில் விழுந்தது. தள்ளு வண்டியில், அரிக்கேன் வெளிச்சத்தில் கடலை வறுக்கும் சத்தமும் கேட்டது.  ’சொய்ங்.. சொய்ங்.. டண்டண்டண்ண்ண்.. சொய்ங்.. சொய்ங்.. டண்டண்டண்ண்ண்..’ ஒரு ரிதமிக்கா கடலையை வறுத்துக் கொண்டிருந்தார் அந்த பெரியவர். டிராக்டரில் ஒரு பெரிய கூட்டமே வந்து இறங்கியது. வந்த வேகத்தில் திருவாரூர் போகும் பஸ்சில் ஏறியது. மொத்தத்தில் இரவு இளமையோடு இருந்தது.

பொடிநடையா வந்து செல்வம் திரையரங்கத்தில் இரவுக்காட்சி பாத்து முடித்தாயிற்று. சண்முகத்துக்கு கும்பகோணம் அத்துப்படி. அண்ணா பால் டெப்போவுக்கு போய் சேரவும் மணி ஒன்றரை ஆச்சு. பரிச்சியமில்லாத இடம். தெரு விளக்குகளைத் தவிர வேறு ஒன்றும் எரியவில்லை.

டெப்போ வாசலில் நின்றதும், இருட்டிலிருந்து ஒரு குரல், “யாருப்பா.. என்ன வேணும்?”

குத்து மதிப்பா குரல் வந்த திசையை நோக்கி, “பால் வாங்க வந்தோம்ங்க. இங்கத்தானே கொடுப்பாங்க?”

வாயில் சிகரெட் பத்த வைத்துக்கொண்டே, “ஆமா. எத்தினி லிட்டரு?” என்று கேட்டவர், முகம் தெரிந்தது.  அந்த இரண்டு விநாடிகளில், கனத்த உருவம் என்று தெரிந்தது. மீசை காது வரை வளைந்து நெளிந்து இருந்தது.

“35 லிட்டர்”

“பால் வண்டி வர இன்னும் நேரமிருக்கே தம்பிகளா. பணத்த கட்டின ரசீது வெச்சிருக்கீங்களா?”

“இல்லீங்க. கொடவாசலேர்ந்து வர்றோம். பாலுக்கு சொல்லி வெக்கலீங்க”

“என்ன தம்பி.. இன்னிக்கு முகூர்த்த நாளு... எப்பவும் பால் எக்ஸ்ட்ரா இருக்கும். இன்னிக்கு இருக்கிறது சந்தேகம்தான்.”

நானும் சண்முகமும் ஒருவரையொருவர் என்ன செய்வது என்றுத் தெரியாமல் பார்த்துக் கொண்டோம்.

அவரே தொடர்ந்தார், “இதுக்குத்தான் முன்னாடியே ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கனும். போவட்டும். 2 1/2 மணிக்கு திருப்பனந்தாள்லேர்ந்து ஒரு வண்டி வரும். அதுல வர்ற பால் ரெகுலர் கஸ்டமருக்கு. மிச்சம் இருக்கிற பால் எடுத்து வெச்சிருவோம். அதுக்கப்புறம் தஞ்சாவூர்லேந்து 3 .45க்கு இன்னொரு வண்டி வரும். ரெண்டுலயும் என்ன தேறுதோ பாப்போம்.”

“சரிங்கய்யா. ஒருவேளை இல்லைனா வேற எங்க கெடக்கும்?” மொத மொத என்னையும் சண்முகத்தையும் நம்பி ஒரு பொறுப்ப கொடுத்திருக்காங்க. பால் இல்லைனு போய் சொன்னா ரொம்ப அசிங்கமா இருக்குமேனு ஒரு கவலை.

”தம்பிகளா.. என்கிட்ட இருக்கிற பால தர்றேன். ரொம்ப கம்மியா இருந்துச்சுனா.. நேரா தஞ்சாவூர் பால் டெப்போவுக்கு போங்க. நாஞ்சிக்கோட்ட போற வழியில இருக்கு. அங்க போங்க” இது அக்கறையா இல்லயா கிண்டல் பண்றாரானு இருட்டில் தெரியல.

”அந்த சிமெண்ட் கட்டைல உக்காருங்க. பால் வந்ததும் பாப்போம்”

சண்முகம் உக்கார்ந்த அஞ்சு நிமிஷத்தில்  கால் நீட்டி தூங்கிவிட்டான். பால் விற்கும் பெரியவர் சண்முகத்தை விட பெரிய கொரட்டை விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு மட்டும்தான் தூக்கம் வரவில்லை.  மணி 1:50 ஆகியிருந்தது. சுற்றியும் பார்த்தேன். கும்பகோணத்தின் முக்கிய தெருவாக எனக்கு பட்டது. தஞ்சை செல்லும் வழியாக இருக்கும். சரக்கு/காய்கறி தாங்கிய தள்ளு வண்டிகளும், டிவிஎஸ்-50களும் மார்க்கெட் செல்லும் திசையில் போய் கொண்டிருந்தன. மக்கள் நடமாட்டம் கொஞ்சம் இருந்தது. சிலர் நடந்தும், பலர் சைக்கிளிலும் இரண்டு திசைகளிலும் சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் ஒரு டீக்கடை ஒன்றிருந்தது. எதிரே சிட்டி யூனியன் பேங்க் இருந்தது. வாசலில் ஒரு காவலாளி. அவனும் ஒரு நாற்காலியில் உக்கார்ந்த் நிலையில் தூங்கிக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய ஹோட்டல் இருந்தது. டீக்கடையில் ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்றது. உள்ளிருந்து நாலு கரைவேட்டிகள் இறங்கினர்.

“நாலு டீ போடுப்பா” என்ற சத்தம் எனக்குத் தெளிவாகக் கேட்டது. எப்படியும் ஐம்பது அடி தள்ளியிருக்கும்.இருந்தாலும் கேட்டது. இதனாலத்தான், ’பகல்ல பக்குவம் பாத்து பேசு.. இரவுல அதுவும் பேசாதே’னு பெரியவங்க சொன்னாங்கப் போல. கொஞ்ச நேரத்துல அந்த அம்பாசிடர் காரும் போனது. மணி இரண்டு ஆகியிருந்தது. இவ்வளவு நடந்தும் மணி இரண்டுதானா?

கொசுத் தொல்லை வேறு. காதுக்கு அருகே உய்ய்ய்ங் உய்ய்ய்ங் என்று சத்தமிட்டப் படி பறந்து கொண்டிருந்தது. அவைகளெல்லாம் ஓய்வெடுப்பதில்லைப் போலும். நான் அந்த டீக்கடைக்கு போனேன்.

”ஒரு டீண்ணே.. சக்கர தூக்கல” என்றேன். டீ மாஸ்டரை கூர்ந்து கவனித்தேன். அழுக்கேறிய பனியன். வாய் நிறைய வெற்றிலை பாக்கு.குதப்பிக்கொண்டே வேலை பார்த்தார்.

கட கடவென்று ஒரு டீ கிளாஸ்சில் சக்கரையை அள்ளிப்போட்டு சூடாக பாலை ஊற்றி அதன் மேல் டீ தண்ணி ஊற்றி, ரெண்டு முறை தலைக்கு மேலாக தூக்கி அடித்து ஊற்றி கொடுத்தார்.  எனக்கு டீ கொடுத்துவிட்டு மடியிலிருந்த சுருக்கு பையிலிருந்து புகையிலை எடுத்து வாயில் போட்டார். சட்டைப் பையிலிருந்து ரூ.1 எடுத்துக் கொடுத்தேன். டீயை பொறுமையாக குடித்துவிட்டு மெதுவாக நேரத்தைப் பார்த்தேன். 2.12. ச்சே நேரம் நகரவேயில்லையே என்று நொந்தபடியே திரும்ப டெப்போவுக்கே வந்தேன். எங்கும் நிசப்தம்.. கூர்ந்து கேட்டால் வண்டுகளின் சத்தம். கொரட்டை சத்தம். அவ்வப்போது போகும் எண்ணெய் போடாத சைக்கிளின் கிரீச் சத்தம். எனக்குத் தூக்கம் அரவே வரவில்லை. இரவு இவ்வளவு நீளமானதா? படுத்தால் உறங்குகிறோம். காலையில் எழுந்திரிக்கிறோம். இடையில் 7-8 மணி நேரமாவதே அது வரை நான் உணர்ந்ததில்லை.

தூரத்தில் ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு பால் வண்டி போலவே இருந்தது. ஸ்பீட் குறைய ஆரம்பித்தது. அட பால் வண்டி வந்துவிட்டது என்று கொஞ்சம் சந்தோஷம். ஆனால் கடையைத் தாண்டி அந்த டீக்கடையில் நின்றது. கையில் கட்டியிருந்த வாட்சில் நேரத்தை பார்த்தேன். 2:29. எப்படியும் இன்னும் பத்து பதினைந்து நிமிஷத்துக்குள் வந்திடும். நம்பிக்கையோடு காத்திருந்தேன். வேற வழி?

2:47க்கு வந்தது பால்வண்டி அது வரை தூங்கிக் கொண்டிருந்த பெரியவர் சடாரென்று எழுந்தார். பட படவென அந்த இடத்தில் இருந்த எல்லா ட்யூப் லைட்டயும் போட்டார்.

“டேய் ராமலிங்கம்.. ராமலிங்கம்.. எழுந்திரிடா வண்டி வந்திருச்சு.” என்று சத்தம் போட்டார். கடைக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்தவன் விருட்டென எழுந்தான். கைலியை தூக்கிக் கட்டி வேகவேகமாக பால்வண்டியின் கதவினை தொறந்தான். மிக வேகமாகவும் லாவகமாகவும் அனைத்து பால் ட்ரேயையும் இறக்கினான். பெரியவர் ஒரு பேப்பாரில் வந்த மொத்த ட்ரே கணக்கையும் குறித்தார். காலா, அறையா, ஃபுல்லா என்றுக் கேட்டுக்கொண்டே இருந்தார். ராமலிங்கம் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான். என்ன என்று எனக்கு பார்க்க ஆவலாகயிருந்தது. அருகில் சென்று பார்த்ததும் புரிந்தது. ஒவ்வொரு ட்ரேயிலும் பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் பாக்கெட்டுகளாக அடுக்கியிருந்தது. அனைத்தையும் மூன்று பகுதிகளாக பிரித்து வைத்து. மேலே ஐஸ் கொட்டினார்கள். வண்டி டிரைவரிடம் ரசீது ஒன்றைக் கொடுக்க அவன் புறப்பட்டுச் சென்றான்.

பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும், கூட்டிக் கழிச்சு பார்த்தவர், “தம்பி, வந்திருக்கிற பால் கணக்கப் பாத்தா.. பதினைஞ்சு லிட்டர் தேறும். ஒரு பையைக் கொடு “ என்றார். நான் பையைக் கொடுத்தவுடன் அதில் பதினைந்து பாக்கெட்ட அடுக்கிக் கொடுத்தார். ”ராமலிங்கம், டேய்ய்ய், இத உள்ள இருக்கிற ஐஸ் பொட்டி பக்கத்துல வை” என்றார். அவன் எடுத்த வைத்துவிட்ட அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் கும்மிருட்டாக ஆனது. மணி இப்போது 3:10.

பெரியவர், “இன்னும் ஒரு வண்டி வரவேண்டியிருக்கு. 3:30..3:45க்கு வரும். அதுவரைக்கும் அப்படியே படுத்துக்கோ தம்பி” என்று சொன்ன அடுத்த நிமிடம் அவர் தூங்கிவிட்டார். 20-25 நிமிடம் இங்கே என்ன நடந்தது என்று புரிந்து கொள்வதற்கே எனக்கு சற்று நேரம் பிடித்தது. இது எதுவுமே தெரியாமல் சண்முகம் தூங்கிக் கொண்டிருந்தான்.

3:20க்கு எனக்கு லேசாக தூக்கம் வந்தது. அப்படியே காலை நீட்டி சுவற்றில் சாய்ந்துக் கொண்டே கண்ணை மூடினேன். ஒரு வேளை 25 லிட்டர்தான் கிடைக்கிறது என்றால் வேறு என்ன செய்யலாம் மீதமுள்ள பத்து லிட்டருக்கு என்று யோசிக்கத் தொடங்கினேன். தஞ்சாவூருக்கு போய் வாங்கிக் கொண்டு போவதெல்லாம் முடியாத காரியம். அந்த பக்கம் திருவாரூர் போலாமா? இல்லை சுவாமிமலையில் இருக்குமா?

சடாரென்று 10 கறவை மாடுகள் அருகில் வந்து நின்று, மகனே உனக்கு தேவையான பாக்கெட் பால் இருக்கிறது என் மடியில் இருக்கிறது எடுத்துக் கொள் என்று சொல்வது போன்ற ஒரு அசிரீரி கேட்டது. திடுக்கிட்டு முழித்துப் பார்த்தேன். அப்படியெதுவும் இல்லை. இப்போது நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகயிருந்தது.

ராமராஜன், பால் விற்பவர்கள், பால் கறப்பவர்கள், பால் வீடு வீடாக டெலிவரி செய்பவர்கள் மீதெல்லாம் மனதில் அதீத பாசமும் மரியாதையும் வந்து போனது. மிகவும் கஷ்டமான வேலை இதுவாகத்தான் இருக்கும் என்றெல்லாம் யோசனை வந்தது.  நினைத்து பாருங்கள் காலை ஐந்து ஐந்தரைக்கெல்லாம் வீட்டு வாசலில் எப்படி பால் வருகிறது. இவர்கள் இல்லையென்றால் அதிகாலையில் காஃப்பி குடிப்பதே கனவாகி போய்விடும் என்றெல்லாம் மனம் பிதற்ற ஆரம்பித்தது. (பிற்பாடு தூக்கமில்லாமல் இருந்தால் இப்படித்தான் கண்டதை யோசிக்கத் தோன்றும் என்று பாட்டி சொன்னது புரிந்தது)

4:15 ஆன போது அடுத்த வண்டியும் வந்தது. மீண்டும் அதே காட்சிகள். எடுப்பதும், அடுக்குவதுமாக ராமலிங்கம். ஒரு நோட்டில் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார் பெரியவர். அவர் கணக்கு போடும்போது கடையை நோட்டமிட்டேன். சுவற்றில் தேதி காலண்டர், மாத காலண்டர் ஒரு மூலையில் இருந்தது. அதனருகே வெங்கடாஜலபதி ஃபோட்டோ இருந்தது. இரண்டு சின்ன விளக்கும் இருந்தது. அதன் கீழே விநாயகர் சிலை ஒன்றும் இருந்தது. ஒரு ஃபேன் இருந்தது. எம்.ஜி.ஆருடன் பெரியவர் சின்ன வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இருந்தது.

கணக்கு போட்டு முடித்த பெரியவர், “தம்பி உன் நல்லநேரம், 20லிட்டர் பால் எக்ஸ்ட்ரா இருக்கு, கொண்டா அடுத்த பைய” என்றார். மீதியை ராமலிங்கம் அடுக்கி வைக்க நான் ரூ175 எடுத்துக் கொடுத்தேன்.

“இந்த பை தாங்காது. நான் சாக்கு பை தர்றேன். அதுல கொண்டு போ. அடுத்த நட இந்த பக்கம் வந்தேனா ஞாபகமா இந்த கோணி பைய கொண்டு வந்து கொடுக்கிறியா?”

நான் வேகமாக தலையாட்டினேன்.

“நடந்தா வந்தீங்க?”

“ஆமாங்க”

“சரிய்ய்ய்.. தூக்கிட்டு நடக்கமுடியாது. ரிக்‌ஷா புடிச்சிட்டு போயிடுப்பா” என்றார்.

“சரிங்க. ரொம்ப சந்தோஷம்.”

சண்முகத்தை எழுப்பினேன். மணி 4:40 ஆகியிருந்தது. ரிக்‌ஷா புடிச்சு, பஸ்ஸடாண்ட் வந்து பஸ் புடிக்க 4:55 ஆனது. அடுத்த அரை மணியில் குடவாசல் வந்து சேர்ந்தோம். வீடு போய் சேர 5:40 ஆனது.

சித்தப்பாவிற்கு ரொம்ப சந்தோஷம். “வாடா வாடா. நாலு மணிக்கெல்லாம் வந்துடுவேனு நெனச்சேன். ஆறாக போகுதுனவுடனே கொஞ்சம் பய்ந்துட்டேன். ரொம்ப கஷ்டப்பட்டீயோ?” என்றுக் கேட்டார்.

சண்முகம், “அதெல்லாம் ஒன்னுமில்ல அத்தான். நம்ம வீட்டுக்குத்தானே செய்றோம். ஒரு சிரமமும் இல்ல. போனோம் பால வாங்கினோம். வந்திட்டோம். ஒன்னும் இல்ல.” என்றான். நான் பட்ட கஷ்டம் அவனுக்கு எங்க தெரியப்போகுது?

சித்தப்பா, “சரி சரி 8:30க்கு நல்ல நேரம், அதுக்குள்ள ஒரு தூக்கத்தப் போட்டு எழுந்திரிங்கடா. பாவம்.. கண்ணப் பாரு எப்படி செவந்து கெடக்கு” என்றார்.

அப்படியே படுத்தவன் எட்டு மணிக்கு சூடான காஃப்பி மணத்துடன், ””அத்தான்.. அத்தான்” என்று என்னை எழுப்பினாள் அத்தை மகள்.

0 Comments:

Post a Comment

<< Home