My world according to me

Thursday, October 07, 2010

Short Story in Tamil
 
இராமையாவுக்கு குட‌வாச‌ல் ப‌க்க‌த்தில் சேங்காலிபுர‌ம் என்ற‌ சிறிய‌ கிராம‌ம் சொந்த‌ ஊர். அவ‌ரின் ம‌னைவி ஜான‌கிக்கு ப‌க்க‌த்தில் இருக்கும் எட்டுக்குடி சொந்த‌ ஊர். சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ளே பார்த்து வைத்து முடித்து வைத்த‌ திரும‌ண‌ம். அது ஆயிற்று முப்ப‌து வ‌ருட‌ங்க‌ள். மிக‌வும் அன்பான‌ ஆத‌ர்ச‌ த‌ம்ப‌திக‌ள். ஊரே மெச்சும் அவ‌ர்க‌ளை கண்டு. அவ‌ர்தான் அங்கு இருக்கும் ப‌ள்ளியின் த‌லைமையாசிரிய‌ர். அருமையாய் பாட‌ம் எடுப்பார். அவ‌ருடைய‌ க‌ணித‌ வ‌குப்பை யாரும் புற‌க்க‌ணித்த‌தே கிடையாது. எளிதாய் புரிய‌ வைப்பார். வீட்டிலும் அப்ப‌டியே! ச‌ண்டையே வ‌ராது அவ‌ருக்கும் ஜான‌கிக்கும். ஊரில் எந்த‌ த‌ம்ப‌திக்கும் ச‌ண்டை என்றாலும், இவ‌ர்க‌ள்தான் முன் நின்று தீர்த்து வைப்பார்க‌ள். யாரும் அவ‌ரின் பேச்சுக்கு ம‌று பேச்சு பேசிய‌து கிடையாது. ம‌கிழ்ச்சியாய் சென்ற‌து அவ‌ரின் வாழ்க்கை. வீடு விட்டால் ப‌ள்ளி. ப‌ள்ளி விட்டால் வ‌ய‌லுக்கு செல்வார். அவ‌ரும், ஜான‌கியும் அருமையாய் நாற்று ந‌டுவார்க‌ள். ப‌ருவ‌ம் த‌வ‌றாம‌ல் விவ‌சாய‌ம் செய்வார்க‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் த‌ங்க‌ளுடைய‌ க‌ள‌த்துமேட்டை கொடுத்து உத‌வுவார்க‌ள். அவ‌ருக்கு ஒரே ஒரு குறைதான். தின‌மும் அதிகாலையில் இரு ஜோடி குயில்க‌ள் கூவி அவ‌ரை எழுப்பிவிட்டுவிடும். அதை க‌ண்டால் அவ‌ருக்கு பிடிக்க‌வே பிடிக்காது! ஜான‌கிக்கு அந்த‌ குயில்க‌ளை மிக‌வும் பிடிக்கும், ஆனால் க‌ண‌வ‌னுக்கு பிடிக்காதே, அத‌னால் அவ‌ற்றை துற‌த்தி விட‌ பார்ப்பாள். ஆனால் அந்த‌ குயில்க‌ள் வென்றுவிடும். திட்டிக்கொண்டே திண‌மும் எழுவார்.

அவ‌ர்க‌ளின் ஒரே ம‌க‌ன் ம‌த‌ன் ந‌ன்றாய் ப‌டித்து முடித்து சென்னையில் பெரிய‌ க‌ம்பெனியில் வேலை செய்கிறான். தாம்ப‌ரம் அருகே பெரிய‌ வீடு க‌ட்டி ம‌னைவி ர‌ம்யாவுட‌னும், ம‌க‌ள் காவ்யாவுட‌ன் பெற்றோர்க‌ளை போல் அமைதியாய், அன்பாய் வாழ்கிறான். ர‌ம்யாகூட‌ அவ்வ‌ப்போது ம‌த‌னை வ‌ம்புக்கு இழுத்து பார்ப்பாள். அவ‌னோ அப்பாவுக்கு மேல். மிக‌வும் பொறுமையாய் ப‌தில் சொல்லுவான். ப‌திலுக்கு ஒரு நாளாவ‌து கோப‌‌ம் வ‌ர‌ வேண்டுமே.. ம்ம்ம்ஹும். இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒவ்வொரு கோடைக்கும் வ‌ந்துவிடுவார்க‌ள். அங்கிருந்து எட்டுக்குடிக்கு சில‌ நாட்க‌ள் சென்று த‌ங்கி வ‌ருவார்க‌ள். இராமையாவுக்கு கோடை என்றால் சின்ன‌ குழ‌ந்தையாய் மாறி விடுவார். காவ்யாவோடு ம‌ணிக்க‌ண‌க்கில் விளையாடுவார். பொழுது போவ‌தே தெரியாது.

எல்லாம் அமைதியாய் சென்ற‌து இராமையா ஓய்வு பெறும் வ‌ரை. அவ‌ர் ஓய்வு பெற்ற‌ இர‌ண்டே மாத‌த்தில் ஜான‌கி பெய‌ர் தெரியாத‌ நோயால் இற‌ந்து போனாள். இராமையா துடித்து போனார். அவ‌ரை தேற்ற‌வே முடிய‌வில்லை. அவ‌ருக்கு எதுவுமே பிடி கொள்ள‌வில்லை. இர‌ண்டே வார‌த்தில் மெலிந்து போனார். ஊரே வ‌ருத்த‌ப‌ட்ட‌து. இருக்காத‌ பின்னே. முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஊரே மெச்சிய‌ த‌ம்ப‌தி ஆயிற்றே. ம‌த‌னுக்கு என்ன‌ செய்வ‌து என்றே தெரிய‌வில்லை. ந‌ன்றாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அப்பாவை த‌ன்னோடு அழைத்து செல்வதென்று. இராமையா முத‌லில் ம‌றுத்தார். காவ்யா அழுதாள். முர‌ண்டு பிடித்தாள். தாத்தாவின் ம‌ன‌தை க‌ரைத்துவிட்டாள். இராமையாவால் எதுவும் செய்ய‌ முடிய‌வில்லை. வ‌ய‌லை விற்றார்க‌ள். வீட்டை ம‌ட்டும் விற்க‌ ம‌றுத்தார். ம‌த‌னுக்கும், ர‌ம்யாவுக்கும் புரிந்த‌து. இராமையாவுக்கு ஊரை விட்டு போக‌வே ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. இருப்பினும் பேத்திக்காக‌வும், ஒரு மாறுத‌லாய் இருக்கும் என்று சம்ம‌தித்தார். ஒரு ஞாயிற்றுகிழ‌மை புற‌ப்ப‌ட்டு சென்ற‌ன‌ர்.

இராமையா காவ்யாவை ப‌ள்ளிக்கு அழைத்து செல்வ‌து, வீட்டு பாட‌ம் சொல்லி கொடுப்ப‌து, பூங்காவுக்கு சென்று விளையாடுவ‌து என்று கால‌த்தை க‌ட‌த்தினார். உள்ளுக்குள் ஜான‌கியை இல்லாத‌ வாழ்க்கை மிக‌வும் வாட்டிய‌து. அவருக்கு நகரம் புதிதல்ல. பல முறை இங்கு வந்து தங்கி சென்று இருக்கிறார். ஆனால் இந்த முறை இங்கேயே நிரந்தரமாய் இருக்க வேண்டுமே. நாட்கள் செல்ல செல்ல நகர வாழ்க்கை நரகமாய் தோன்றியது. இரைச்சல் மிகுந்த வீதி, துற் நாற்றம் அடிக்கும் வீதி, செயற்கையாய் பழகும் மனிதர்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம். மனைவி ஜானகியை பிரிந்து அவர் இருந்ததே இல்லை.
தூக்க‌ம் வ‌ர‌வே இல்லை. புர‌ண்டு புர‌ண்டு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஒவ்வொரு இர‌வை க‌ழித்தார். ம‌க‌னிட‌மும், ம‌ரும‌க‌ளிட‌மும் சொல்லி புரிய‌ வைக்க‌லாம். ஆனால் பேத்திக்கு புரியாதே. சொல்ல‌வும் முடியாம‌லும் மெல்ல‌வும் முடியாம‌லும் கால‌த்தை க‌ட‌த்தினார். ம‌த‌னும், ர‌ம்யாவும் புரிந்து கொண்ட‌ன‌ர். மெதுவாய் காவ்யாவிட‌ம் சொன்னார்க‌ள். அவ‌ளுக்கு புரிய‌வில்லை. ச‌ரி பிற‌கு பார்த்து கொள்ள‌லாம் என்று மூவ‌ரும் விட்டுவிட்டார்க‌ள்.

ஒரு நாள் தொலைக்காட்சியில் காவ்யா சிங்க‌ம் ப‌ற்றிய‌ க‌தை ஒன்று க‌ண்டாள். அந்த‌ சிங்க‌த்தை யாரோ விஷ‌மிக‌ள் காலில் சுட்டுவிட்டார்க‌ள். சில‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள் அந்த‌ சிங்க‌த்தைப் பிடித்து, அத‌ற்கு ம‌ருத்துவ‌ம் செய்து காப்பாற்றின‌ர். ஒரு மாத‌ம் த‌ங்க‌ளிட‌ம் வைத்து அந்த‌ சிங்க‌த்தை ந‌ன்றாக‌ பார்த்து கொண்ட‌ன‌ர். அந்த சிங்கம் கூண்டுக்குள்ளே கஷ்டபட்டு இருந்தது. காவ்யாவுக்கு ஏன் அந்த சிங்கம் கஷ்டபட்டு இருக்கிறது என்று புரியவில்லை. அம்மாவிடம் கேட்டாள். "அம்மா, அந்த சிங்கத்திற்கு வேலைக்கு சாப்பாடு கிடைக்கிறதே, பக்கத்து வீட்டு ஜிம்மி போல் சந்தோஷமாய் இருக்க வேண்டியதுதாணே. ஏனம்மா அழுது கொண்டே இருக்கிறது." ரம்யா, அவளுக்கு புரியும்படி அது காட்டிலே வாழ்ந்தது. அதற்கு மனிதனோடு வாழ தெரியாது என்றாள். பிற‌கு ஒரு நாள் அந்த‌ சிங்க‌த்தை மீண்டும் காட்டில் விட்ட‌ன‌ர். சந்தோஷமாய் காட்டுக்குள்ளே சென்றது. காவ்யாவுக்கு எதோ புரிந்த‌து. அப்பாவிட‌மும், அம்மாவிட‌மும் சென்று தாத்தாவை ஊரிலேயே இருக்க‌ட்டும் என்றாள். தாத்தா அங்கு சென்றால், ந‌ல்லா இருப்பாங்க‌ என்று அவ‌ளே தேற்றினாள்.

இராமையா மீண்டும் கிராம‌த்திற்கு வ‌ந்தார். அதிகாலையில் அதே இரு ஜோடி குயில்க‌ள் கூவி அவ‌ரை எழுப்பிய‌து. இப்போது அவ‌ருக்கு கோபம் வ‌ர‌வில்லை! மூணாம் ந‌ம்ப‌ர் வ‌ண்டியில் த‌ன் பேத்தி வ‌ருவாள் என்று வழி மேல் விழி வைத்து கோடையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்.