My world according to me

Wednesday, June 17, 2015

உலக திரைப்படங்களும் தமிழ் திரைப்படங்களும்!

(கவனிக்க: நான் இன்னும் “காக்கா முட்டை” பார்க்கவில்லை. அதனால் இந்த பதிவு அந்த திரைப்படத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை)

திரைப்படங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலோடு முற்றிலும் கலந்துவிட்ட ஒன்று. அதனை பிரிக்க நினைப்பதும், கர்ணனின் கவசக்குண்டலத்தை பிரிக்க நினைப்பதும் ஒன்றே. அந்த அளவுக்கு நம்மிடையே நீக்கமற கலந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஃபேஸ்புக்கில், `தமிழ் சினிமா ஹிந்தி சினிமாவைவிட 50 வருடங்கள் பின்னடைந்து இருக்கிறது’ என்று எழுதினேன். அதன் பிறகு நண்பர்கள் சிலர் வெகுண்டெழுந்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஏன் அப்படி சொன்னேன் என்பதனின் விளக்கம் தேவை என்று எனக்குப் பட்டது.

திரைப்படம் ஒரு பொழுதுப்போக்கு அம்சம் மட்டுமே. அதற்கு இத்தனை முக்கியத்துவம் தேவையில்லை என்று ஒரு சாரர் முதலிலேயே புறம் தள்ளி விடுவார்கள். அவர்கள் இதற்கு மேல் படிக்கத் தேவையில்லை. உங்கள் பொன்னான நேரத்தை மற்ற முக்கிய பணிகளுக்கு செலவிடுங்கள். தமிழ் படங்களில் சகாப்தம் வரை எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. ’சகாப்தம்’ யார் படம் என்று கேட்டீர்கள் என்றால் நீங்களும் தயவுசெய்து இதற்கு மேல் படிக்கவேண்டாம். அதனைவிட முக்கியமான ஒன்று, என்னிடம் தமிழ் படங்களே சிறந்தது என்று வாதிட வேண்டாம். ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் படங்களை ஒரு மாமாங்கத்துக்கு ஒன்று என்ற கணக்கில் பார்க்கும் உங்களுடன் என்னால் வாதிட முடியாது! :)

அதிகம் திரைப்படங்களை பார்க்காத சிலர், “நீ எப்படி அப்படி சொல்லலாம். யாம் அறிந்த மொழிகளிலே டமிலே சிறந்தது. அதுப்போல டமில் திரைப்படங்களும் சிறந்தது. காஞ்சனா2, மங்காத்தா, அசல் போன்ற திரைக்காவியங்கள்..” என்று எவரேனும் புறப்பட்டீர்கள் என்றால் நிற்க. உங்களோடும் நான் வாதிட விரும்பவில்லை. இப்போதே சொல்லிவிடுகிறேன், “டமில் திரைப்படங்களே சிறந்தது! நன்றி!!”

ஹிந்தி திரைப்படங்கள் 90களின் இறுதியில் தாவூத்தின் பிடியிலிருந்து வெளியே வரத் தொடங்கியது. அதுவரை பியார், மொஹபத், தில், லவ் என்ற கோணத்திலேயே திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது என்று என்னால ஆணித்தரமாகச் சொல்ல முடியும். குறிப்பாக சமீபத்தில் வந்த திரைப்படங்கள் அதனை நிரூபணம் செய்கிறது. ஹிந்தி திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களா என்றால்.. வெகு சில படங்களை மட்டுமே சொல்ல முடியும். இருப்பினும் தமிழ் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது தரம் பல மடங்கு உயர்வாகவே இருக்கிறது. Kahaani, Special 26, Baby, OMG, Piku அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இது வரை இந்த திரைப்படங்களை பார்க்கவில்லையென்றால் தயவுசெய்து பார்த்துவிட்டு வந்து சண்டைக்கு வாருங்கள்!

சரி எது உலக திரைப்படம்?  தன்னுடைய கலாச்சாரத்தையும், அடையாளத்தையும், வாழ்க்கை முறையையும், மிகையில்லாத நடிப்போடும், இயல்பான அழகியலோடு சொல்லும் எந்த திரைப்படமும் உலகத் திரைப்படமே. (ஈரான்) மஜித் மஜிதியின் படங்கள் அதற்கு சிறந்த உதாரணம். அவருடைய படங்களில் "Children of heaven, Song of sparrows” மிக முக்கியமான படைப்புகள். மிடில் ஈஸ்ட் என்றாலே Sheik/Prince பணக்காரர்கள் என்று எண்ணும் நம்மை ஈரானில் உள்ள விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அநாயசமாக சொல்லியிருப்பார். இதுவரை தமிழ் படங்கள் அதனை சொல்லவில்லையா என்றால்.. மன்னிக்கவும்.. இது வரை நான் பார்க்கவில்லை. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் சொல்லாததா என்று உங்கள் இருக்கையிலிருந்து கூவுவது கேட்கிறது. அவை தமிழில் வந்த சிறந்த திரைப்படம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு! அவ்வளவே!!

நாளொன்றுக்கு ஒரு திரைப்படமாவது பார்த்துவிடும் எனக்கு ஒரு கட்டத்தில் தமிழ் திரைப்படங்கள் போதவில்லை. மெல்ல மலையாளம், தெலுகு, ஹிந்தி, ஹாலிவுட், ஈரானியன், கொரியன், ஸ்பானிஷ், ஃப்ரெஞ்சு படங்கள் என்று விஸ்தரித்து பார்க்கத் தொடங்கினேன். அதற்கு நெட்ஃபிலிக்ஸ் மிகவும் உதவுகிறது. எல்லா மொழிகளிலும் குப்பைப் படங்கள் வருகிறது. மறுக்க முடியாது. ஆனாலும் அவ்வப்போது பரந்து விரிந்த இருண்ட பிரபஞ்சத்தில் மிளிரும் நட்சத்திரமாக ஒரு சில நல்லப் படங்கள் வருகிறது.

அப்படித்தான் யாரோ ஒருவர் “எனக்குள் ஒருவன்” (கன்னடப் படம் லூசியாவின் தமிழாக்கம்) பார்த்துவிட்டு, `நோலனுக்கே (Christopher Nolan) சவால்’ என்று பதிவிட்டிருந்தார். படித்துவிட்டு ஒரு கணம் திகைத்துவிட்டேன். எனக்கு அவருடைய அறியாமையை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. இன்னும் சிலர் (விசிலடிச்சான் குஞ்சுகள் மட்டும் அல்ல சில பிரபலங்களும் அதில் அடக்கம்) அஜித் மங்காத்தாவில் (பில்லாவா?) டூப் போடாமல் ஹெலிகாப்டர் சீன் நடித்திருக்கிறார் என்று பிணாத்திக் கொண்டு இருந்தனர். 1987ல் மலை உச்சியிலிருந்து டூப் போடாமல் பறக்கும் பலூனுக்கு ஜாக்கி சான் தாவுவார்.

இன்னொன்றும் அவசியம் சொல்லவேண்டும். ஏன் தமிழ் சினிமாக்கள் தரமிழந்து இருக்கிறது என்று ஆராய்ந்தால், அந்த குற்றம் நம்மையே சாரும்! செயற்கையான/பகட்டுப் படங்களுக்கு தரும் ஆதரவை நாம் என்றுமே ‘தரமான’ திரைப்படங்களுக்கு தந்தது இல்லை. அப்படியே தரமான படம் வந்துவிட்டாலும், திரையரங்குக்கு சென்று ஆதரவு தருவோர் எத்தனை பேர். சென்ற வாரம் “Dil Dadakane do" பார்க்கப் போயிருந்தேன். படம் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் இருந்த போதும், அரங்கம் நிறைந்து இருந்தது. நண்பர்கள் நாங்கள் தனித்தனியே உட்கார வேண்டியிருந்தது! எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக ரசித்தனர்! திரையில் ஹீரோவின் பெயரை பார்த்து பரவசம் அடையவில்லை! நறுக்கிய பேப்பர் துகள்களை எறியவில்லை!
மைனா திரைப்படத்தை தனி ஒரு ஆளாக பார்த்ததை நண்பர் ரமேஷ் அடிக்கடி சொல்லி வேதனைப்படுவார். திரைப்படம் வந்த ஆறு மணி நேரத்தில் திருட்டு விசிடி பதிவு இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதனை பார்க்கும் எவருக்கும் என்னிடம் தயவு செய்து வாதம் செய்ய வரவேண்டாம்.

எது ’தரம்’ என்றே தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எனது வாதம் என்றும் புரியப் போவதில்லை!


யார் கடவுள்?

’யார் கடவுள்?’

            இதைப்பற்றி எழுத வேண்டுமென்று ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். நான் “எழுத வேண்டும்” என்று சொன்னவுடனே பலருக்கு மனசுல இப்படித்தான் தோன்றியிருக்கும், “ஆமா இவன் பெரிய எழுத்தாளன்.. எழுதி கிழிக்க போறானாக்கும்.. கழுத.. என்ன தெரியும் இவனுக்கு? பெருசா பேச வந்துட்டான்.” நீங்கள் நினைப்பது உண்மையே.  கண்டிப்பாக நான் அந்த லெவலில் மமதையா யோசித்து அப்படிச் சொல்லவில்லை. நான் அந்த லெவலுக்கு இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் தகுதியான எழுத்தாளர்கள் பக்கத்துல கூட நிற்க எனக்கு தகுதி வந்துவிடாது. ஆனாலும் மனதில் பட்டதை, எனக்கு தெரிந்த உண்மைகளை, கருத்துகளை சொல்ல வேண்டுமென்று எப்பொழுதுமே ஒரு உந்துதல் என்னிடம் இருக்கும். சொல்ல நினைப்பதை சுதந்திரமாகவும், பட்டவர்த்தனமாகவும் எழுதிவிட துணிந்துவிட்டேன். அதன் விளைவுதான் இது.

முதலில், ’யார் கடவுள் ’ என்ற சர்ச்சை/விவாதம் ஏன் வந்தது? நான் தமிழன். என் சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள் பெரிதும் சராசரி தமிழனுக்கு இருக்கும் அதே நேர்பாதையில்தான் என்னுடையதுமிருக்கும். இதில் வியப்பதற்கோ, ஐயப்படுவதற்கோ, கேள்வி கேட்பதற்கோ ஒன்றுமில்லை. சமீப காலமாக என்னுடைய பார்வையில் தமிழனுக்கே உரித்தான முரண்பாடுகள் மிகத் தெளிவாக எனக்கு தெரிகிறது. அதனைக் நான் எப்படி அணுகுகிறேன், பார்க்கிறேன் என்பதே இந்த பதிவின் முயற்சி.

இரண்டாவது, கடவுள் என்றவுடன் நான் மதம், ஜாதி பற்றி ஏதேனும் சொல்லப்போகிறேனா என்று எண்ண வேண்டாம். அதனைப் பற்றியும் எழுதவேண்டும். அது இன்னொரு நாளைக்கு.

கடவுள் என்றால் என்ன? அகராதியில் தேடினால் இப்படித்தான் வருகிறது, “ a superhuman being or spirit worshiped as having power over nature or human fortunes” ஹூம்ம்ம் ஏன் கடவுள் அவனது படைப்பில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா? அப்படியே என்றால் ஏன் மனித உருவில்தான் இருக்கவேண்டும்? இந்த அடிப்படையிலேயே தமிழன் அடைந்து விடுகிறான் என்று எனக்கு தோன்றுகிறது. அதனாலயே சக மனிதன் ஒருவன் அவனது துறையில் புகழ் உச்சியில் இருந்தால் அவனை கடவுளாகவே ஆக்கிவிடுகிறார்கள். மனிதன் என்றில்லை.. நமக்கு உதவும் ஏர், மாடு, கதிர் அரிவாள், சைக்கிள், படி, புத்தகம், இசைக்கருவி அனைத்தும் கடவுள்.

எங்கிருந்து வருகிறது இந்த தாழ்ச்சி? ஏன் இந்த தாழ்ச்சி? எப்படி இதனை அணுகியிருக்க வேண்டும்?

ஒருவர் மிக சிறப்பாக பாடுகிறார் என்றால் அவரும் சக மனிதன்தானே? அவருக்கு மட்டும் சிறப்பாக செயல்பட ஏதேனும் அமைக்கப்பட்டதா என்ன? இல்லையே. அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது என்ன? அவரின் கடின உழைப்பு, அவருடைய குரல் வளம், அவருக்கு அமைந்த வாய்ப்புகள் மிக முக்கிய பங்குகள் வகிக்கின்றன.

ஒரு சிறந்த பாடகனின் வெற்றியில் எங்கிருந்து வருகிறது தெய்வம்? கேட்டால் “தெய்வம் கொடுத்தக் குரல்” என்பர் சிலர். இன்னும் சிலர் சற்று கடந்து வந்து, காலமே கடவுள் என்பர். பாடகராக முயற்சி செய்த சிலரோ, தங்களது முயற்சி சராசரி மனிதனால் ஆன முயற்சி. அவரோ வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அது அசாத்திய முயற்சி. அந்த அசாத்தியம் தெய்வத்தினால் கொடுக்கப்பட்டது. அவரே தெய்வம் என்று எண்ணுகிறார்கள்.. நம்பியும் விடுகிறார்கள். இந்த over obsessiveness விட்டொழிக்கவே முடியாதா? பாடகரின் திறமையை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே? அந்த ’தெய்வ’ பாடகரிடம் நெருங்கி பழகுங்கள். அவருக்குள் இருக்கும் சராசரி மனிதம் உங்களுக்கும் புரியும்.

பாடகன் என்று மட்டுமில்லை. நடிகனிடம், இசையமைப்பாளரிடம், அரசியல்வாதியிடம், சாமியாரிடம், விளையாட்டு வீரரிடம் நம் மக்கள் வைத்திருக்கும் அலாதி பிரியம், பக்தி, வழிபாடு இதையெல்லாம் சொல்லி மாளாது. இந்த பலஹீனங்கள் பெருவாரியான தமிழ் மக்களிடம் காணலாம். இந்த அடிமைத்தனம் ஏதோ ஒரு வகையில் புதைந்திருக்கிறது. தன்னால் புரிந்து கொள்ள முடியாத, தன்னுடைய சக்திக்கு மீறிய முயற்சி, திறன், ஆற்றல் எவரிடமாவது இருந்தால் அவன் கடவுள். ஏன் அந்த கடவுள் தன்மை பெரிதும் கலை (அதுவும் திரைப்படம்) சார்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது? ஏன் ஒரு விவசாயிடம் காண முடியவில்லை? நம்முடன் வேலை செய்யும் சக ஊழியனிடம் ஏன் கண்டு கொள்ள முடியவில்லை? மிக எளிது. சக ஊழியனால் எப்படி முடிந்தது என்று கணக்கிட தெரிவதாலும், நம்மாலும் சாத்தியப்படுமென்பதாலும் அவன் சக மனிதன். தெய்வத்திற்கு நிகரில்லை.

”சரி, நான் சினிமா ஹீரோவை/இசையமைப்பாளரை வழிபடுகிறேன். நான் கட் அவுட் வைப்பது கற்பூரம் ஏற்றுவது என்னுடைய தனி மனித உரிமை. அதனால் உனக்கு என்ன ஆகிப்போச்சு? ” என்று காட்டமாக சிலர் கத்துவதும் காதில் விழுகிறது. ஏன் சிலர் அதனை கேள்வியாகவும் பல முறை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். ”எனக்கு பிடித்ததை நடிப்பு வடிவமாகவோ, இசை வடிவமாகவோ, நகைச்சுவை வடிவமாகவோ இவர்கள் தருகிறார்கள். இதில் என்ன தப்பு?”

சரி ஒரு இசைக்கலைஞனை ரசிப்பதற்கான அளவுகோல், மதிப்பீடுதான் என்ன? அதற்கு எல்லைகளோ, வரைமுறைகளோ இல்லையா என்ன? அதற்கு தெய்வ வழிபாடுதான் உச்சமா? ஒரு இசையமைப்பாளருக்கு உச்சபட்ச அளவுகோல் என்ன? Bach, Beethoven, Mozart அவர்களை யாரவது கடவுள் என்று சொல்லியிருக்கிறார்களா? அவர்களை ஜீனியஸ் என்று வேண்டுமானால் சொல்லுவார்கள். அவர்களுக்கு தெய்வ வழிபாடு இருக்கிறதா என்ன? இன்றைய இசையமைப்பாளர்களின் பங்குதான் என்ன? அவர்களுடைய இசை தனி மனித சந்தோஷத்திற்கு மீறி ஏதாவது நன்மை பயத்திருக்கிறதா? சரி இன்னிக்கு கடவுள்னு இசையமைப்பாளர் பின்னாடி போறவங்க எத்தனை பேர் அவருடைய பாடல்களை இணையத்தில் திருட்டுத்தனமாக டவுன்லோட் செய்யாமல், காசு கொடுத்து வாங்கியிருக்கிறீர்கள்?

ஒரு முறை நடிகருக்கு வாழ்த்து சொல்லுகிறேன் என்று ஒரு காணொளி எடுத்தார்கள். அதில் ஒரு அம்மணி, “நான் அவரின் தீவிர ரசிகை. என் பிள்ளையையும் அப்படியே வளர்க்கிறேன். என்னுடைய பேரப்பிள்ளைகளையும் அப்படியே வளர்ப்பேன்” என்றார். ஒரு கணம் திகைத்து போனேன். என்ன மாதிரியான சமூகமிது? இந்த நடிகர், தன் சொத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு எழுதி வைக்கிறேனு ஒரு பெரிய விழா எடுத்து புரூடா விட்டார். அதுலேர்ந்து ஒரு பைசா எந்த கடைக்கோடி தமிழனுக்கு உபயோகம் சென்றடைந்திருக்கிறதா? நடிகைக்கு கோவில் கட்டுகிறான். அரசியல்வாதிக்காக கூட்டம் கூட்டமாக மொட்டையடிக்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். அழகு குத்திக் கொள்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பிரதமர் ஆனதும் மோடிக்கு கோவில் நிறுவியுள்ளனர். அரசியல்வாதி  ’யார் ஊழல் செய்யவில்லை. ஜெ. மட்டும் என்ன விதிவிலக்கா?’ என்று புண்ணாக்கு லாஜிக் பேசுகிறார்கள்.

மொத்தத்தில் நம்மிடையே ஒரு தத்துவவாதி இல்லை. சாதனையாளர் இல்லை. நம்மை நாமே உயர்த்தி பிடிக்க நமக்கு தெரியவில்லை.  நமக்கென்று ஒரு கோட்பாடு இல்லை. மதிப்பீட்டின் எல்லைகளை இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்கிறோம். எல்லோரும் ஜீனியஸ்.. எல்லோரும் கடவுள்.. எல்லோரும் சாதனையாளர்கள்..என்னிஷ்டம்.. என் உரிமை.. இப்படித்தான் இன்றைய சமுதாயம் இருக்கிறது. நான் கடவுள். நீ கடவுள். மனிதனே இவ்வுலகில் இல்லை? இது எங்கு போய் முடியும்?

கிளாசிக்கல் இசை, திரையிசை, சினிமா, நகைச்சுவை, அரசியல், கலை, ஆன்மீகம் எதை வேண்டுமானாலும் ரசியுங்கள். அதற்கு  உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் கடவுளை கண்டேன்... காத்தாடியைக் கண்டேன் என்று உங்களையே நீங்கள் சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். அவற்றுக்கு ஒர் தீர்க்கமான எல்லையை நிறுவுங்கள். அதனை ஒரு போதும் மாற்றாதீர்கள். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் எந்த நிகழ் கால நடிகரோ, இசையமைப்பாளரோ, அரசியல்வாதியோ, சாமியாரோ கடவுளுக்கு இணை இல்லை. ஒரு போதும் அவர்களை கடவுளோடு ஒப்பீடு செய்யாதீர்கள். புரியும்படி சொல்லியிருக்கேன் என்று நம்புகிறேன்!