My world according to me

Tuesday, May 20, 2014

அவன் ரொம்ப கெட்டவன்

எனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. நான் வீட்டிற்கு ஒரே பெண்.  கல்லூரி முடிக்க ரொம்பவேச் சிரமப்பட்டேன். படிக்க அல்ல. அது எனக்கு நன்றாகவே வந்தது. கல்லூரிக்கு வருடா வருடம் பணம் கட்ட ரொம்பவே சிரமப்பட்டனர் என்னை பெற்றவர்கள். சொற்ப வருமானம், வாடகை வீடு, தீராக் கடன், எதிர்பாரா விருந்தாளிகள் என்று ஏதோ ஒரு செலவு மாதா மாதம் வந்துப் போனது. குடும்ப பட்ஜெட்டில் விழும் துண்டு மாதத்துக்கு மாதம் பெரிதாகி, ஜமுக்காளம் ரேஞ்சுக்குப் போனதில் வியப்பில்லை. இதெல்லாம் நடுத்தர வர்க்கம் என்றாலே சாதாரணம்தான். அதனைப் புரிந்து உணர்ந்து நன்றாக படித்தேன். என் நிலைப் புரிந்து எனது நண்பர்கள் எனக்கு உதவினர். நல்ல மதிப்பெண் பெற்று இஞ்சினியரிங் முடித்தேன். கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல மென்பொருள் அலுவலகத்தில் வேலைக் கிடைத்தது. இனி விடிவுகாலம் எளிதில் பிறக்கும் என்ற நம்பிக்கை வீட்டிலுள்ள அனைவருக்கும் பிறந்தது.

எனக்கு ஒரே சிந்தனைத்தான். அலுவலகத்துக்கு அருகிலேயே நல்ல பெரிய வீடாக வாடகைக்குப் பார்க்கவேண்டும். வீடு மாறிய பின்னால், அந்த நாலாவது வீட்டைத் தினமும் நரக வேதனையோடு தாண்டிச் செல்வது தேவையிருக்காது.  இன்னும் சிறிது காலம்தான். அதன் பிறகு விடுதலை. அப்படி என்ன இருக்கிறது அந்த வீட்டில்? அங்கு ஜேம்ஸ் இருந்தான். அவன் சதா சர்வகாலமும் கஞ்சா பிடித்துக் கொண்டு வீட்டு வாசலில் அமர்ந்திருப்பான். தொலைக்காட்சியை ஊரே அதிரும்படி சத்தம் வைப்பான். அப்படியே ஆளை உரிப்பது போலப் பார்ப்பான். அந்தத் தெருவில் பல வீடுகள் அவனுக்குச் சொந்தம், எங்கள் வீடு உட்பட. அதில் வரும் வருமானத்தை  வைத்து காலத்தைக் கடத்துகிறான். அவனுடைய சிறு வயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டனர். உறவினர்கள் இருந்தாலும் சின்ன வயதிலிருந்தே தனியே வளர்ந்தான். அவனுக்குப் படிப்பு வரவில்லை. பனிரெண்டாவது பரிட்சைக்கு பயந்து எழுதப் போகவில்லை. சொத்து இருப்பதால் அவனுக்கு கவலையில்லை. அவனை  எளிதில் கெட்ட பழக்கங்கள் ஆட்கொண்டது வியப்பில்லை. நான் அவன் முகத்தை ஏறெடுத்து பார்க்கவே பயமாக இருக்கும். கருத்த தேகம். அடர்த்தியான சுருள் முடி. தமிழ் திரைப்பட அடியாள் போன்றே இருக்கும் அவன் தோற்றம். அவன் வீட்டைத் தாண்டித்தான் தினமும் செல்லவேண்டும். வீட்டை விட்டு வெளியே போனாலும், வீட்டுக்கு திரும்ப வந்தாலும், அவன் வீட்டை கடந்துதான் வரவேண்டும். மாதா மாதம்  வாடகை வசூல் செய்ய ஐந்தாம் தேதி வருவான். எனக்கு அந்த நாள் நரக வேதனையாய் இருக்கும். இனி அந்த கவலை சில மாதங்கள்தான். அதன்பின் எல்லா மாதமும் ஐந்தாம் தேதி இனிய நாளாக அமையும். மனதில் அப்படி ஒரு நிம்மதி வியாபித்தது.

அன்று முக்கிய வேலை இருந்ததால் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல லேட்டானது. வழக்கமாக அலுவலகத்தில் இருக்கும் கார் இல்லை. ஏன் என்று கேட்டப்போது மதியம் யாரோ ஒரு தலைவர் இறந்துவிட்டாராம். ஊரே அல்லோலகப்பட்டது. அதனால் ஊரே வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தது.  என்னுடன் வேலைச் செய்த அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். அவசர அவசரமாய் அலுவலகத்திலிருந்து இறங்கி ஒரு ஆட்டோ புடித்து வீட்டிற்குச்  செல்ல எத்தனித்தேன். வழக்கமாகச் செல்லும் வழியில் செல்லாமல் ஆட்டோ வழி மாறிச் சென்றது. ஏன் என்று கேட்டேன். அந்த டிரைவர் என் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். நிலை தடுமாறி விழுந்தேன். ஒரு குறுகிய சந்துக்குள் செல்ல.. எனக்கு மெல்ல புரிந்தது. ஆட்டோ நின்றதும் தாவிக் குதித்து எதிர் திசையில் ஓடினேன். பின்னாடியே இருவர் துரத்தினர். ஒரு பெரிய தெருத் தெரியத் திரும்பினேன். அங்கே ஜேம்ஸ். நான் ஓடி வருவதைப் புரிந்துக் கொண்டு, என் பின்னே யார் வருகிறார்கள் என்று பார்த்தான். அந்த ஆட்டோ டிரைவரும், இன்னொருவனும்  தென்பட.. ஏதும் சொல்லாமலே ஜேம்ஸுக்கு புரிந்தது. என்னைப் தன் பின்னுக்குத் தள்ளி, அந்த இருவரையும் ஒற்றை ஆளாய் சமாளித்து அடித்துத் துவைத்தான்.

"நீ எங்க இங்கே?" என்றான் ஜேம்ஸ்.

"இங்க பக்கத்துலத்தான் என் ஆபிஸ் இருக்கு. வீட்டுக்கு போக லேட்டாயிடுச்சு.." நான் மூச்சு முட்டிச் சொல்லி முடிப்பதற்குள் அவனுக்குப் புரிந்தது.

"வா.. நான் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போறேன்" என்றான்.  அவனோடு பத்திரமாய் வீடு வந்துச் சேர்ந்தேன்.

வீட்டு வாசலில் அம்மாவும் அப்பாவும் கவலையோடுக் காத்திருந்தனர். அவனோடு பைக்கில் வந்ததும் இன்னும் கவலை அதிகமாக இருந்திருக்கும்.

"பாப்பாவ பத்திரமா கூட்டிக்கிட்டு உள்ளே போங்க. காலையில பேசிக்கலாம்." என்றுச் சொல்லிக் கொண்டே சிகரெட்டைப் பத்த வைத்தான். பதிலோ நன்றியோ எதுவும் எதிர்ப்பார்க்காமல் அவன் வீட்டை நோக்கி நடந்தான் ஜேம்ஸ். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடந்ததைச் சொன்னேன். அப்பா கண்ணீர் மல்க, "அந்த கர்த்தர்தான் ஜேம்சை அனுப்பி உன்னைக் காப்பாத்தியிருக்காரு." என்று சொன்னப்படியே சித்தனாதன் திருநீர் இட்டார்.

அடுத்த இரண்டு நாளைக்கு ஜுரம் இருந்தது. மூன்றாவது நாள் சற்று உடல் தேறி காலையில் ஆபிசுக்கு புறப்பட்டேன். அன்று ஜேம்ஸ் வீட்டைக்  கடக்கும் போது கவனித்தேன். வீட்டு வாசலில் அழகிய ரோஜாப்பூவும், மல்லிகைச் செடியும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தது. ஒரு கூண்டில் லவ் பேர்ட்ஸ் ரெண்டு லவ்விக் கொண்டு இருந்தது. மெல்ல நோட்டமிட்டுக் கொண்டேத் தாண்டினேன். ஜேம்ஸ் வழக்கம் போல் சிகெரட் பிடித்துக் கொண்டிருந்தான்.

"என்னம்மா இன்னிக்குத்தான் ஆபிசுக்குப் போறப் போல" என்றான்.

"ஆமாம். அன்னிக்கு சரியான நேரத்துல வந்து காப்பாத்துனுதுக்குத் தேங்க்ஸ்" என்றேன்.

"அடப் போம்மா.. இதுக்குப் போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு" என்று கட கடவெனச் சிரிந்தான்.  சிரித்தது வசீகரமாயிருந்தது. ஆங்காங்கே வெள்ளி முடி தெரிந்தது. கருப்பு அஜித் போல இருந்தான்.

அதன் பின் அந்த நாலாவது வீட்டை மின்னலாய் தாண்டவில்லை. கால்கள் மெதுவாய் செல்ல ஆரம்பித்தது!

--முற்றும்--